திருவண்ணாமலையில் பெண்களுக்கு கருக்கலைப்பு: கணவன்- மனைவி கைது
பெண்ணாக பிறந்தால் தங்களுக்கு பாரம் என்று கருதும் பெற்றோர் கருவிலேயே அது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்து விடுகிறார்கள். இதனால் நாட்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து கருவிலேயே ஆணா, பெண்ணா என்று கண்டு பிடிப்பது குற்றம் என்று மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது.
ஆணா, பெண்ணா என கண்டு பிடித்து கருக்கலைப்பு செய்தால் ஜெயில் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து ஸ்கேன் சென்டர்களிலும், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருத்துவமனைகளில் அறிவிப்பாக ஒட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் திருவண்ணாமலையில் ஒரு ஸ்கேன் சென்டரில் பெண்ணின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று கண்டு பிடித்து பெண் கருவை கலைத்து வந்தது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் என்ற இடத்தை சேர்ந்தவர் டாக்டர்ஆனந்தி. இவர் தனது வீட்டிலேயே ஸ்கேன் சென்டர் வைத்து நடத்தி வந்தார். இங்கு கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து சொல்வதாகவும் பெண் என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை சுகாதார பணிகள் இயக்குனருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ஆனந்தியின் செயல்பாடுகளையும், பரிசோதனை மையத்தையும் சென்னையில் இருந்து சென்ற சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டு கடந்த ஒரு வாரமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அங்கு கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இரவு நேரங்களில் மட்டுமே அவர் இதுபோன்ற சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்ததால் பொறி வைத்து கையும் களவுமாக பிடிக்க சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக கர்ப்பிணி ஒருவரை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவரிடம் ரூ.6 ஆயிரம் கொடுத்து டாக்டர் ஆனந்தி வீட்டுக்கு கருக்கலைப்பு செய்ய ரகசியமாக அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த பெண் ஆனந்தி வீட்டுக்கு சென்றார். அங்கு கருக்கலைப்பு செய்ய டாக்டர் ஆனந்தி நள்ளிரவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் மாநில ஆய்வுக்குழு கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், நுன்கதிர் டாக்டர் நடராஜன், திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் அங்கு புகுந்து திடீர் சோதனை நடத்தினர்.
அங்கு அனுமதியின்றி வைத்திருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர். அங்குள்ள ரகசிய பாதாள அறையில் வைத்து கருக்கலைப்பு செய்ய முயன்றபோது ஆனந்தி அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து அதிகாரிகள் ரகசிய பாதாள அறையில் சோதனை செய்தனர்.
அங்கிருந்த ஸ்கேன் அறிக்கைகளை ஆய்வு செய்தனர். அதில் பெண்களின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதற்கான பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு இருந்த பல்வேறு அறிக்கைகள் இருந்தன. மேலும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்களும் சிக்கியது.
ஆனந்திக்கு உடந்தையாக அவரது கணவர் தமிழ் செல்வன் மற்றும் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் செயல்பட்டு வந்தனர். அதிகாரிகள் அவர்கள் இருவரையும் பிடித்து திருவண்ணாமலை போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் தனியாக செயல்பட்டு வந்த பரிசோதனை மையத்திற்கும் சீல் வைத்தனர்.
திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தி, அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சிவக்குமார் இங்கு வரும் பெண்களை பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வருவது, திரும்ப அவர்களை அங்கு கொண்டு போய் விடுவது மற்றும் புரோக்கர்போல் செயல்பட்டு வந்தார். கருக்கலைப்பு செய்யும் பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர். முறைகேடாக கர்ப்பம் தரித்த பெண்களின் கருவை கலைக்கவும், பெண் சிசு கருவை கலைக்கவும், அதிகமாக பணம் வசூல் செய்துள்ளனர்.
2016-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக இது போல் சட்டவிரோத கருக்கலைப்பு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தி ஏற்கனவே இதுபோன்று குழந்தைகள் ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்து சட்டவிரோத கருக்கலைப்பு நடத்தியதாக கைது செய்யப்பட்டவர் என தெரியவந்தது. அவர் ஜாமீனில் வெளியில் வந்து மீண்டும் தனது வீட்டிலேயே ரகசியமாக ஸ்கேனிங் மையம் நடத்தி வந்துள்ளார்.
திருவண்ணாமலையில் இதுபோல் மேலும் பல சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவற்றையும் கண்டுபிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா மாலை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங் கேற்றார். அதே விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர் கந்த சாமி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசுக்கள் கொலை செய்யப்படுவதால் தேசிய அளவில் தலை சாய்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, “மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1,000 ஆண்களுக்கு 920 முதல் 925 பெண்கள் என விகிதாச்சாரம் இருந்தது. பெண்களுக்கு எதிரான சமுதாயத்தை நோக்கி செல்கிறோம். இதுதொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், படிக்கவே இல்லை. பிளஸ் 2 கூட தேர்ச்சி பெறவில்லை. அரசு பல்வேறு முயற்சி எடுத்து கடந்த 2012 மற்றும் 2016-ம் ஆண்டு அவரை கைது செய்ததுள்ளது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது கடந்த மட்டும் 25 கருக்கலைப்புக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக 19 ஆயிரம் பெண் சிசுக்களை, அந்த பெண் கொன்றுள்ளார். 19 ஆயிரம் பெண்களைக் கொன்று சமுதாயத் துக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு மூலம் பெண்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கியுள்ளனர். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்ற அரசு விழாவில், சட்ட விரோத கருக்கலைப்பு மூலம் பெண் சிசுக்கள் கொலை செய்யப் பட்டு வருவது குறித்து ஆட்சியர் கந்தசாமி வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.