கோடி கணக்கில் மோசடி… : கராத்தே சங்கங்கள் மீது இந்திய ஒலிம்பிக் சங்கம் புகார்
தற்காப்பு கலையில் உலக அளவில் பிரபலமானது கராத்தே. சமுதாயத்தில் விஞ்ஞான வளர்ச்சி அபரீத வளர்ச்சி அடைந்தாலும் தனிமனித பாதுகாப்பிற்கு தற்காப்பு கலை என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கராத்தே கலை கற்பதன் மூலம் ஒழுக்கத்துடன் கூடிய வலிமையான உடற்பயிற்சியை பயிற்றுவிக்கப்படுகிறது.
நமது நாட்டின் பல்வேறு பாதுகாப்பு துறையில் பணிபுரியும் வீரர்கள் தற்காப்பு கலையை கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் கலையாக கற்றுகொடுக்கப்பட்டு வந்த கராத்தே பின்னர் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் விதமாக சங்கங்கங்கள் அமைத்து மாவட்ட, மாநில மற்றும் அகில இந்திய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. முதன் முதலில் ஆல் இந்தியா கராத்தே பெடரேசன் (AIKF) துவங்கப்பட்டு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது விதி. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படுவதில் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் கோடிக்கணக்கில் கராத்தே சங்கங்கங்களின் நிர்வாகிகள் மோசடியில் ஈடுபடுவதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் புகார்கள் குறித்து முதற்கட்ட விசாரணையில் மோசடியில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும், கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதால் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் புகார் மனு அளித்துள்ளது. புகாரில் கராத்தே அசோசியேசன் (KAI), மற்றும் கராத்தே இந்தியா ஆர்கனிசேசன் (KIO) ஆகிய கராத்தே சங்கங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டால் கோடிக்கணக்கில் மோசடி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கராத்தே போன்ற விளையாட்டில் தலைமை பொறுப்பை தக்க வைத்து கொள்ள ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்களை பாதுகாத்துக்கொள்ள கூடுவிட்டு கூடு பாயும் அரசியல் வாதிகளுக்கு ஒலிம்பிக் சங்கத்தின் புகார் பீதியை ஏற்படுத்தபோவது உறுதி. ஒலிம்பிக் சங்கத்தின் நடவடிக்கை இறுதிச்சுற்றை எட்டியுள்ள நிலையில் கராத்தே கலையை காப்பாற்றப்போவது யார்? விடை தெரியாத வினாவிற்கு பதில் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனிடையே கேரளாவை சேர்ந்த நீல்மோசஸ் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலமாக பல ஆண்டுகளாக சிலரின் பிடியில் சிக்கி தவித்த கராத்தே கலை மீண்டெழும் என நம்பப்படுகிறது.
– நமது நிருபர்