குப்பைத் தொட்டிக்காக போராடும் “மகாராஜா” !விஜய்சேதுபதியின் 50 வது படமான”மகாராஜா” விமர்சனம்
ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில், சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிப்பில், விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம்புலி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடிப்பில், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மகாராஜா”.
கதைப்படி.. சென்னை கே.கே நகரில் சலூன் கடை வைத்திருக்கும் மகாராஜா ( விஜய் சேதுபதி ) மகள் ஜோதியிடன் ( சச்சினா நெமிதாஸ் ) பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருகிறார். முந்தைய நாள் இரவு தனது வீட்டில் லெட்சுமி காணாமல் போனதாக அதாவது தனது மகளின் உயிரைக் காப்பாற்றிய விலை மதிப்பற்ற குப்பைத்தொட்டியை, ஸ்போர்ட்ஸ் கேம்ப் சென்றுள்ள தனது மகள் திரும்பி வருவதற்குள் கண்டுபிடித்து தருமாறு பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளரிடம் ( நட்டி நட்ராஜ் ) கூறுகிறார். அதற்கு ஏழு லட்சம் பணம் தருவதாகவும் பேரம் பேச, குப்பைத்தொட்டிக்கு இவ்வளவு பணமா ? இதற்குப் பின்னால் ஏதோ இருக்கிறது என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
மாகாராஜாவின் காணாமல் போன குப்பைத்தொட்டியை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா ? அவருக்கும் கொள்ளை கும்பலுக்கும் என்ன தொடர்பு ? என்பது மீதிக்கதை….
படம் பார்க்கும் போது அடுத்து என்ன ? என அனைவரும் எதிர்பார்க்கும் வகையில், திரைக்கதை அமைத்து காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். படம் முழுவதும் மகளுக்காக எதையும் செய்யத் துணியும் தந்தையாக இருக்கமான முகத்துடன், கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி.
இரவு நேரத்தில் கொள்ளையடிக்கும் வீடுகளில் சமைத்து சாப்பிட்டு, பெண்களை வன்புணர்வு கொள்ளும் கூட்டாளிகளுடன் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார் அனுராக் காஷ்யப். பகலில் எலக்ட்ரிக் கடை நடத்தி, தனது மகளின் சந்தோஷமே எனது சந்தோஷம் என பொறுப்புள்ள தந்தையாகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் நட்டி நட்ராஜ், சிங்கம்புலி, அருள்தாஸ், அபிராமி ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.