உண்மைக்காக பத்திரிகையாளர் சிந்திய ரத்தம், “ரத்தம்” படத்தின் திரைவிமர்சனம்
இன்பினிட்டி பிலிம் வென்சச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சி.எஸ். அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ரத்தம்”.
கதைப்படி… சர்வதேச அளவில் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளர் ( ரஞ்சித் குமார் ) விஜய் ஆண்டனி. இவர் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்த போது, இவரது மனைவி பிரசவ காலத்தில் உயிரிழக்கிறார். அந்த சமயத்தில் கூட இருந்திருந்தால் மனைவியை காப்பாற்றியிருக்கலாம் என்கிற குற்ற உணர்ச்சியுடன் வேலையை விட்டுவிட்டு மது போதைக்கு அடிமையாகி, தனது குழந்தையுடன் கல்கத்தாவில் வசித்து வருகிறார். அவரது நெருங்கிய நண்பர் செழியன் சென்னையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். ரஞ்சித் குமாரின் வளர்ப்பு தந்தையும், பத்திரிகை அதிபருமான ரத்தின பாண்டியன் ( நிழல்கள் ரவி ) மீண்டும் சென்னைக்கு வந்து பத்திரிகை பணியை தொடங்குமாறு அழைக்கிறார்.
ரஞ்சித் குமாரும் சென்னை வந்து செழியன் கொலைக்கான பின்னனியை விசாரிக்க, பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து மேலும் சில கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கிறது. இந்த கொலைகளுக்குப் பின்னால் ஏதோ பெரிய நெட் வொர்க் கும்பல் செயல்படுவதாக ரஞ்சித் குமார் தீவிர விசாரணையில் இறங்குகிறார்.
கொலைகளுக்கான காரணத்தை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…
கொலை செய்ய நினைப்பவர்கள், கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவரைத் தேர்வு செய்து, அவர்களை மனரீதியாக தயார் செய்யும் விதமாக, புதிய கோணத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
புலனாய்வு பத்திரிகையாளர் ஒரு செய்தியை எந்தெந்த கோணத்தில் கையாள வேண்டும், உன்மையை வெளிக்கொண்டு வருவதற்கு புலனாய்வு பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சிரமங்கள் என, பத்திரிகையாளர் கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்திற்கு பின்னனி இசையும், ஒளிப்பதிவும் வலு சேர்த்திருக்கிறது. இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.