உயர்நீதிமன்ற உத்தரவால் டாஸ்மாக் கடைகளை அகற்றிய அதிகாரிகள் ! தொடரும் சட்டவிரோத மது விற்பனை !
தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த இரண்டு அரசு மதுபான கடைகளை ( கடை எண் : 8516, 8576 ) உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அந்த இரண்டு கடைகளும் அமைந்துள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் டாஸ்மார்க் மாவட்ட அதிகாரி ஆய்வு மேற்கொண்டு ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடினார்கள்.
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகையில்.. தேனி மாவட்டத்தில் பல இடங்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடைகளை விட, தனியார் மதுபான கடைகள் ( FL-2 ) எஃப்.எல்-2 அமைந்துள்ளது. பெரிய குளத்தில் மூன்று கடைகளும், தேனியில் ஐந்து கடைகளும், ஆண்டிபட்டி, கம்பம் போன்ற பகுதிகளிலும் தனியார் மதுபான கடைகள் நிறைய உள்ளன. இதேபோல் தனியார் மதுபான கடைகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிலும் பெரியகுளத்தில் அமைந்துள்ள மூன்று தனியார் மதுபான கூடங்களை அகற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சேர்ந்து போராடியும் கூட, இதுவரை அந்தப் பகுதியில் ஒரு கடை கூட அகற்றப்படவில்லை. ஏனெனில் இந்த கடைகளை நடத்துவது பணபலம் படைத்த அரசியல்வாதிகள் தங்களின் பினாமிகள் என்பதால்தான் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்கிறார்கள்.
தேனி மாவட்டம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து இடங்களிலும், 24 மணி நேரமும் இயங்க கூடிய செல்லிங் பாயிண்ட் என்று சொல்லப்படும் கள்ள மது விற்பனையும் இயங்கி வருகிறது. இதையெல்லாம் கண்கானித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு காவல்துறையும், சட்டம் ஒழுங்கு காவல் துறையும் இணைந்து, தங்கள் பங்குக்கு பெற வேண்டியதை பெற்றுக்கொண்டு, பெயரளவுக்கு மாதத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் வழக்கு பதிவு செய்து, கணக்கு காட்டி வருகிறார்கள்.
இதேபோல் பூதிப்புரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இயங்கிவரும் பாரில் 24 மணி நேரமும் கள்ளமது விற்பனை செய்து வருவதை தடுத்து நிறுத்துமாறு, அந்தப் பகுதி பொதுமக்கள் போராடினார்கள். அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தாக்கப்பட்டு, கேமரா, மைக் உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார் அந்த பாரின் உரிமையாளர் பொக்கைச்சாமி. அவர்மீது பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, காவல்நிலையத்தில் வைத்தே செய்தியாளரை மிரட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கிவரும் தனியார் மதுபான கூடங்கள், அரசு மதுபான கடைகள், கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தால், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதே இல்லை. சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் அதிகாரிகளை சரிசெய்து கொண்டு, தொழிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்றால்தான் தீர்வு கிடைக்கும் என்றால், சாமானிய மக்களால் இயலாத காரியம். ஆகையால் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமிழ்நாடு அரசும், உயர் அதிகாரிகளும் விசாரனை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்
மு. மணிமாறன்