திரையரங்கு அதிரும் நகைச்சுவை.. சந்தானத்தின் “டி.டி ரிட்டர்ன்ஸ்”

ஆர்.கே. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சி. ரமேஷ்குமார் தயாரிப்பில், எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், சுரபி, பெப்சி விஜயன், முனிஷ் காந்த், பழைய ஜோக்ஸ் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”.
கதைப்படி… புதுச்சேரியில் சூதாட்டம் தடைசெய்யப்பட்ட போது பிரெஞ்சு குடும்பத்தினர் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பங்களாவில் சூதாட்ட கேம்ப் லிங் நடத்துகின்றனர். விளையாட வருபவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மீறினால் மரணம் நிச்சயம் என எச்சரிக்கப் படுகிறார்கள். அங்கு சென்ற ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போகிறார்கள். இதனால் காவல்துறையினர் அந்த பங்களாவுக்கு வந்து எச்சரிக்கை விடுக்கும் போது பொதுமக்களும் அந்த இடத்திற்கு வருகின்றனர். அப்போது அந்த பங்களாவில் இருப்பவர்கள் காவல்துறையினர், பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர். இருதரப்புக்கும் நடைபெற்ற மோதலில் அந்த பங்களா தீவைத்து கொழுத்தப்படுகிறது. அங்கிருந்த அனைவரும் இறந்து, பேயாக அங்கேயே அவர்களது ஆன்மா அலைகிறது. இவ்வாறு படம் தொடங்குகிறது.

புதுச்சேரியில் அன்பரசு ( பெப்சி விஜயன் ) என்கிற தொழிலதிபர் தனது மகனின் ( கிங்ஸ்லி ) திருமணத்திற்காக குடும்பத்தோடு செல்கிறார். இதற்கிடையில் மொட்டை ராஜேந்திரன், பழைய ஜோக்ஸ் தங்கதுரை உள்ளிட்ட திருட்டு கும்பலை போலீஸ் துரத்த, அவர்கள் பழமையான பொருட்களை விற்பனை செய்யும் கடைக்குள் செல்கின்றனர். அந்த கடையை நடத்தும் கும்பல் ஒரு பெரிய திருட்டை நடத்த திட்டமிட, அவர்கள் கடையில் மொட்டை ராஜேந்திரன் டீம் திருட திட்டமிடுகின்றனர்.
இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகளுக்கு விழா ஏற்பாடுகளை செய்யும் சதீஷ் ( சந்தானம் ), தனது காதலி சோபியா ( சுரபி ) தங்கையின் திருமண விழாவில் கலந்துகொள்கிறார், திருமணம் நின்று போக சோபியா பணப் பிரச்சினையில் சிக்க அவரைக் காப்பாற்றுவதற்காக பணம் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்.

பின்னர் பணத்தைத் தேடி சதீஷ், ரவி ( மாறன் ) அவரது நண்பர் என மூவரும் பேய் பங்களாவுக்குள் செல்கின்றனர். இவர்களை கேம்ப் லிங் விளையாடி வெற்றி பெற்றால் தான் வெளியே போகமுடியும் என பேய்கள் கட்டாயப் படுத்துகிறது. அதன்பிறகு சதீஷின் காதலி சோபியா, மொட்டை ராஜேந்திரன், முனிஷ் காந்த் என ஒவ்வொரு குழுக்களாக அந்த பங்களாவுக்குள் வந்து சிக்குகின்றனர்.

பேய் பங்களாவுக்குள் சென்ற ஒருவரும் இதுவரை உயிடன் வெளியே திரும்பாத நிலையில், சதீஷ் அங்கிருந்து பணத்துடன் வெளியே வந்தானா ? காதலியின் பிரச்சினையைத் தீர்த்து கரம் கோர்த்தானா என்பது மீதிக்கதை….

படம் தொடங்கியது முதல் ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்புக்கு பஞ்சமில்லாத வகையில் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். சந்தானத்தின் நண்பராக மாறன், திருட்டு கும்பலின் தலைவனாக மொட்டை ராஜேந்திரன், அவரது சிஷ்யன் பழைய ஜோக்ஸ் தங்கதுரை, கிங்ஸ்லி, முனிஷ் காந்த் ஆகியோரின் நகைச்சுவை பிரமாதம் என்றே சொல்லலாம். பழைய ஜோக்ஸ் தங்கதுரை பேய் பங்களாவுக்குள் இல்லை என்றாலும், வரும் வழியில் அவரது நகைச்சுவை பிரமாதம்.
படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக பங்களா செட் அமைத்த கலை இயக்குனருக்கு பாராட்டுக்கள்.