நாற்காலி செய்தி எதிரொலி காரணமாக, துணை ஆணையர் அதிரடி மாற்றம் ! மருதமலை கோவிலில் பரபரப்பு !
கோவை மாவட்டத்தில் முருகப்பெருமானின் திருத்தளங்களில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு துணை ஆணையராக பணியாற்றி வரும் திருமதி வர்ஷினி தலைமையிலான நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகவும், தணை ஆணையருடைய வாகனத்தின் தற்காலிக ( ஆக்டிங் டிரைவர் ) ஓட்டுநர் அசோக் என்பவர் கோவில் நிர்வாகத்தில் தலையிட்டு, பணியாளர்களை மிரட்டி வேலை வாங்குவதாக வந்த தகவலை அடுத்து, கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள், வியாபாரிகள் மற்றும் அப்பகுதியினர் கூறிய தகவல்களை கடந்த மார்ச் மாத நாற்காலி செய்தி இதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் திருமதி வர்ஷினி மீது, இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பல்வேறு புகார்கள் சென்றதையடுத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்த கோவிலின் துணை ஆணையர் திருமதி வர்ஷினி அதிரடியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி வெளியானதும் கோவிலின் அறங்காவலர் குழுவினர், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் பணியாற்றிய காலத்தில் பல்வேறு வகையான முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவை அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு இவர் மீது மேல் நடவடிக்கை தொடருமா ? என அப்பகுதியினர் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இருப்பினும் மருதமலை முருகன் கோவிலின் துணை ஆணையர் திருமதி வர்ஷினியை, அதிரடியாக மாற்றம் செய்த இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நமது நாற்காலி செய்தி இதழின் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.