பெண்ணைப் பெத்து வளர்த்தவனுக்குத் தான் தெரியும், இழப்பின் வேதனை ! “மெய்ப்பட செய்” திரைவிமர்சனம்
எஸ்.ஆர். ஹர்ஜித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர். தமிழ் செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மெய்ப்பட செய்”.
கதைப்படி… கதாநாயகன் ஆதவ் பாலாஜி, பக்கத்து கிராமத்து பெண் மதுனிகாவை காதலிக்கிறார். இந்தக் காதலுக்கு நாயகியின் தாய்மாமன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால் காதலர்கள் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுடன் ஆதவ் பாலாஜியின் நண்பர்கள் மூன்று பேரும் துணையாக அவர்களுடனேயே செல்கிறார்கள். பின்னர் இரண்டு ஊர் பகையாக மாறுகிறது.
பின்னர் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டினால் இவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் பிரச்சினையிலிருந்து மீண்டால் போதும் என நினைக்கும் இவர்கள், பின்னர் பிரச்சினைக்கு காரணமானவர்களை எதிர்த்து நின்று போராடி, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என காவல்துறையே அச்சப்படும் பிரபலமான ரவுடி சாம்ராஜ்யத்திற்கு எதிராக களத்தில் இறங்குகிறார்கள். இறுதியாக இவர்களது போராட்டம் வெற்றியடைந்ததா ? காதலால் பிரிந்து கிடக்கும் கிராமங்கள் இணைந்ததா ? என்பது மீதிக்கதை….
படத்தில் அருமையான வசனங்கள் மூலம் ஜனங்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ளார் இயக்குனர் வேலன். உதாரணத்திற்கு நாயகியின் தந்தை ராஜ் கபூர் பேசும்போது… பெண் குழந்தை பிறந்ததிலிருந்து அவளை ரசித்திருக்கிறேன். முதன்முதலில் பாவாடை, சட்டை அணிந்து வரும்போது கிடைக்கும் சந்தோஷம் எல்லையில்லாத ஆனந்தம் என பெண் குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களின் மனநிலையை வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்களுக்கு எவ்வாறு தண்டனை கிடைக்க வேண்டும் என புதிதாக காட்சிகளை அமைத்துள்ளார். தினசரி நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை நாளேடுகளில் படித்துவிட்டு அவரவர் வேலையில் கவணம் செலுத்தும் இந்தக் காலத்தில், சமூகத்தில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், சமூக சிந்தனையோடு “மெய்ப்பட செய்” என்கிற தலைப்பிற்கேற்ப திரைக்கதையின் மூலம் தீர்வையும் கூறிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.