தமிழகம்

கந்து வட்டி கொடுமையா..? : 3 குழந்தைகள் கொலை பெற்றோர் தற்கொலை..

விழுப்புரத்தில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற தச்சுத்தொழிலாளி, மனைவி குழந்தைகளை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளவனூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தச்சுத்தொழிலாளி மோகன் இவருக்கு விமலேஸ்வரி என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர்.

வளவனூர் சிறுவந்தாடு சாலையில் சொந்தமாக மரம் பட்டரை நடத்தி வந்த மோகன் கொரோனா ஊரடங்கால முடங்கிய தொழிலை மீட்டெடுக்க பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தினமும் வழக்கமாக காலை 9 மணியளவில் மரப்பட்டரையை திறக்கும் மோகன் நீண்ட நேரமாகியும் கடை திறக்காத காரணத்தினால் மனைவியின் தந்தை இவரது வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்தவர், அருகில் இருந்தவர்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் ஹாலில் இருந்த மின் விசிறியில் மோகனும் அறையில் மனைவி விமலேஸ்வரியும் மற்றொரு அறையில் மூன்று குழந்தைகளும் ஒரே மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 5 பேரின் சடலங்களையும் கீழே இறக்கி வைத்து வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மோகன் சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீராம் சீட்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. தவறாமல் வட்டிக்கட்டி வந்தவர் ஊரடங்கால் தவணைத் தொகையை சரிவர செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. அண்மையில் அந்த நிறுவன ஊழியர்கள் மோகனை சந்தித்து செலுத்த தவறிய தவணை தொகைகளுக்கு வட்டிக்கு மேல் வட்டிபோட்டு அதிகபட்சத் தொகை கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகின்றது.
இதனால் விரக்தி அடைந்த மோகன், மூன்று குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்து இறந்தவுடன் நான்கு பேரையும் மின் விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இறந்த மோகனின் வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் ஸ்ரீராம் நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் 40 லட்சம் அளவிற்கு கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை செய்து இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் மோகனிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டினார்களா? அல்லது வேறு நபர்கள் மிரட்டினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது.

அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடன் பிரச்சனையால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button