“கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி : வெளியேறும் பாமக… அதிர்ச்சியில் அதிமுக..!
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பள்ளர், குடும்பர், காலாடி ,பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். (நெல்லை மாவட்ட வாதிரியார் சமூக மக்களும் இதில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்).
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும், சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடந்த போதும், பிரதமர் மோடி மதுரைப் பொதுக்கூட்டத்திலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தூத்துக்குடி பொதுக்கூட்டத்திலும், கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள். எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்றி தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தோம். இதுவரை அந்த கோரிக்கைகளுக்கு அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. அதனால், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு கொடுக்கவில்லை. கட்சியின் பெயரையோ, கொடியையோ, தலைவரின் படத்தையோ தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளர் பயன்படுத்தக் கூடாது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சியை தொடர்ந்து பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருக்கின்றது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி, ழிஸி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் வெற்றி பெறவில்லை.
திமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரி சேர்த்து 39 இடங்களில் அசுரத்தனமான வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலையும் இந்த கூட்டணி சந்திக்கின்றது. இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து தீடிர் திருப்பமாக செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தனது இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால், அதிமுக கூட்டணிக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இது அதிமுக தரப்பிற்கு பெறும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பத்து கோரிக்கைகளை முன்வைத்தது பாமக வைத்த பத்துக்கோரிக்கைகளில் ஒன்றைக் கூட அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதால், டாக்டர். ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்து மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவும் தனது முடிவை விலக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சூரியன்