“கள்வன்” ஜீவி பிரகாஷிற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தேறுமா !.?
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரிப்பில், பி.வி. சங்கர் இயக்கத்தில், பாரதிராஜா, ஜிவி பிரகாஷ், இவானா, தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கள்வன்”.
கதைப்படி… மலை கிராமத்தில் கெம்பன் ( ஜிவி பிரகாஷ் ), சூரி ( தீனா ) இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக வசித்து வருகிறார்கள். இருவரும் அனாதைகள் என்பதால் அன்றாட வாழ்க்கைய நகர்த்துவதற்காக சிறுசிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தில குடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள். இந்நிலையில் பக்கத்து ஊரில் கோவில் திருவிழா நடப்பதாகவும், அங்கு இரவு நேரத்தில் ஆண்கள் வீட்டில் இருக்கமாட்டார்கள் எனவும் தகவல் கிடைக்க, இருவரும் திருடுவதற்காக அங்கு செல்கிறார்கள்.
அங்கு ஒரு வீட்டில் வயதான பாட்டியும், நாயகி பாலாமணி ( இவானா ) மட்டும் இருக்கிறார்கள். அந்த வீட்டில் திருடிவிட்டு தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். அதன்பிறகு பல்வேறு சம்பவங்களுக்குப் பிறகு நர்சிங் படிக்கும் பாலாமணியை காதலிக்கிறார் கெம்பன்.
இதற்கிடையில் மலைக்கிராமத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் வனவிலங்குகள் தாக்கி இறந்து போகிறார்கள். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசாங்கம் நான்கு லட்சம் நிவாரணம் வழங்குகிறது. பின்னர் தனது காதலியை பார்ப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கெம்பன், சூரி இருவரும் பெயிண்ட் வேலைகளுக்கு செல்கிறார்கள்.
அங்கு உறவுகள் யாரும் இல்லாத ஆதரவற்றவராக வசித்துவரும் முதியவர் பாரதிராஜாவை முறைப்படி தத்தெடுத்து தனது கிராமத்திற்கு அழைத்து வருகிறான் கெம்பன். பின்னர் கெம்பன், பாலாமணி இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.
அதன்பிறகு முதியவர் பாரதிராஜாவை எதற்காக கெம்பன் தத்தெடுத்தான் ? திருட்டு வேலைகள் செய்யும் கெம்பன், வசதியான வீட்டில் பிறந்த செவிலியர் பாலாமணி இவர்கள் இருவருக்குமான காதல் நிறைவேறியதா ? என்பது மீதிக்கதை…
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் வாரிசுகள் தங்களின் நேரமின்மை காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு, அவர்களுக்கான பராமரிப்பு செலவுகளை கட்டணமாக செலுத்தி நிம்மதியாக வாழ நினைக்கிறார்கள். அவர்களது குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி அன்பு கிடைப்பதில்லை என்கிற கதையை தேர்வு செய்த இயக்குநர், அதனை அழுத்தமாக பதிவு செய்ய தவறிவிட்டார். மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் படும் துயரங்களையும், விலங்குகளின் குணாதிசயங்களையும் ஆங்காங்கே பதிவு செய்திருக்கிறார்.
படத்தில் பாரதிராஜா தனது அனுபவத்தால் காதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் இவானாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாக்ஸ் ஆபிஸில் ஜீவி பிரகாஷ் படங்களுக்கு கடந்த காலங்களில் நல்ல வரவேற்பு இருந்தது அனைவரும் அறிந்ததே. இனிவரும் காலங்களில் ஜீவி பிரகாஷ் கதை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.