நிதி நெருக்கடியில் லைகா நிறுவனம் ! லால் சலாம் படத்தால் 35 கோடி இழப்பு !.?
தமிழ் திரையுலகில் இன்றைய காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பிரபலமான ஸ்டார் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க வேண்டுமானால் தமிழகத்தில் சன் நெட்வொர்க், லைகா நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம். நூறு கோடிக்கு மேல் செலவு செய்து படம் தயாரித்து, தனது வியாபார உத்தியால் செலவிட்ட பணத்தை வசூலிக்கும் வல்லமையும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் உண்டு.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவருகிறது வேட்டையன் திரைப்படம். உலக நாயகன் கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன்-2 பல ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அஜித் நடிப்பில்,மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் விடாமுயற்சி படமும் பல மாதங்களைக் கடந்தும் படப்பிடிப்பு முடவடையாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், நாயகன் அஜித், ஆக்ஷன் கிங் அர்ஜுன் போன்றோருக்கு பேசிய தொகையை இன்னும் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்கிறதாம் லைகா நிறுவனம்.
விடாமுயற்சி படம் முடிவடையாத நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் “குட் பேட் அக்லி” படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இன்னும் நான்கைந்து மாதங்களுக்குப் பிறகுதான் அஜித் தேதி கொடுப்பார் எனத் தெரிந்தும், தற்போது அஜித் வீட்டிற்கே சென்று கதை விவாதம் செய்து வருகிறாராம்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் நீண்ட காலங்கள் படப்பிடிப்பை முடிக்காமல் இயக்குநர்கள் இழுத்தடிப்பதால், ஏற்கனவே திட்டமிட்ட தொகையையும் தாண்டி செலவுகள் பலமடங்கு அதிகரித்துள்ளதாம். ஆகையால் சம்பந்தப்பட்ட இயக்குநர்களை அழைத்து குறிப்பிட்ட தொகைக்குள் படத்தை முடித்துக் கொடுக்க சொல்லியிருக்கிறதாம் லைகா நிறுவனம்.
மேலும் சமீப காலங்களில் லைகா நிறுவனம் தயாரித்த படங்களில் பெரும்பாலான படங்கள் வசூலில் சோபிக்கவில்லை. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் படம், சினிமா ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறாததால், அந்த படத்தின் மூலம் 35 கோடி ரூபாய் லைகா நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.