சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் ஆன்மீக வாதியா ?.!
எடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில், சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உருவாகியுள்ள திரைப்படம் “சித்தா”.
கதைப்படி… திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக ( சூப்பர்வைசர் ) பணிபுரிகிறார் சித்தார்த். தனது அண்ணன் இறந்து விட்டதால் அவரது மனைவி மற்றும் எட்டு வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த குழந்தையை தினசரி பள்ளிக்கு அழைத்துச் சென்று வீட்டிற்கு அழைத்து வருவது இவரது முக்கிய பணிகளில் ஒன்றாகும். அந்தக் குழந்தையும் சித்தார்த் மீது அதீத பாசம் கொண்டு “சித்தா” என்று அழைக்கிறது.
இவரது நண்பனின் அக்கா மகளும் அதே பள்ளியில் படித்து வருகிறார். இரண்டு குழந்தைகளும் தோழிகள் என்பதால், அந்தப் பெண் சித்தார்த்தின் அண்ணன் மகளை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மான் பார்க்க போகலாம் எனக்கூற இருவரும் அங்கு செல்ல முடிவெடுத்து, ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்கிறார்கள். ஆனால் இறுதியில் சித்தார்த்தின் அண்ணன் மகள் இறங்கி விடுகிறார். மறுநாள் அந்தப் பெண் இவரிடம் பேசாமல் பிரம்மை பிடித்தவர்போல் இருக்கிறார்.
பள்ளி முடிந்து வெளியே இரண்டு குழந்தைகளும் வருகின்றனர். சித்தார்த் திடம் அவள் என்னோடு பேச மறுக்கிறாள் என கூற, தனது அண்ணன் மகளை பள்ளியிலேயே விட்டுவிட்டு அந்தப் பெண்ணை பைக்கில் அழைத்துச் செல்கிறார். அப்போதும் அந்தப் பெண் நடுக்கமாகவே எதுவும் பேசாமல் வீட்டிற்கு செல்கிறார். பின்னர் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக சித்தார்த் மீது பழி சுமத்தப்பட்டு அவரை தாக்குகிறார்கள்.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது யார் ? சித்தார்த் இந்த குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வந்தாரா என்பது மீதிக்கதை….
சினிமா கடந்து பொதுவெளியில் நடிகர் சித்தார்த் சமூக அக்கறையுடன் பல்வேறு உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.. ஆனாலும் மத்திய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் படத்தில் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகள், நெற்றியில் பட்டையும், காவி வேஷ்டியும் அணிந்துள்ளதுபோல் காட்சிகளை வைத்துள்ளனர்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதுபோல், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். செல்போனில் கேம் விளையாடும் குழந்தைகள், இக்கட்டான சூழலில் பெற்றோருக்கு போன் செய்யாமல் இருப்பதும், பாலியல் குற்றவாளிகளுக்கு தடயங்கள் இல்லாமல் குற்றங்கள் புரிய சொல்லிக் கொடுப்பது போன்ற காட்சிகளும் முகம் சுளிக்க வைக்கிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆன்மீகவாதிகளாகத்தான் இருக்க வேண்டுமா என்கிற கேள்வியும் எழுகிறது.
தூய்மை பணியாளராக நடித்துள்ள அஞ்சலி நாயரின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தாலும், நாயகனுக்கும் அவருக்குமான ஜோடி பொருத்தம் ரசிக்கும்படியாக இல்லை என்றே கூறலாம்.
படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மற்றபடி படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.