அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நகரச் செயலாளர் ! வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

தேனி அல்லிநகரம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக ராமசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நகராட்சியில் 20-வது வார்டு உறுப்பினராகவும், நகர்மன்ற தலைவர் ரேணுபிரியாவின் கணவருமான பாலமுருகன் நகர் வடக்கு பகுதி திமுக நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். தன்னுடைய மனைவி நகர்மன்ற தலைவராக இருப்பதாலும், நகரச் செயலாளர் என்கின்ற முறையிலும், நகராட்சியின் நிர்வாகத்தில் அதிகமாக தலையிட்டு வந்துள்ளார் பாலமுருகன்.

இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள இருசக்கர வாகன நிறுத்தம் சம்பந்தமான பிரச்சினையில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராமசாமி என்பவரை தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு அழைத்து, அவரைத் தகாத வார்த்தையில் பேசியதோடு, ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விட்டதாக ராமசாமி தரப்பில் இருந்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. முதலில் இந்த புகார் மனு மீது விசாரணை மேற்கொண்ட நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி, பாலமுருகனின் இனத்தை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

பின்னர் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின், துணை கண்காணிப்பாளர் தேவராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாலமுருகன் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்பு மன்னிப்பு கடிதம் கொடுத்ததற்கு பிறகுதான், பாலமுருகனுக்கு நகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பாலமுருகன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிக்கியிருப்பது கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மு.மணிமாறன்
மு. மணிமாறன்