தமிழகம்

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் ! ஆவணங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு..

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக கோவைநாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் தனது முதல் பிரச்சார பயணத்தை அண்ணாமலை பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூரில் துவங்கினார். பிரச்சாரத்தின் போது பேசிய அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு மாநாடு நடைபெற்ற மாதப்பூரில் இருந்து தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதாகவும், 2024 தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகவும், கோவை நாடாளுமன்ற தொகுதியில் போடியிடும் உங்களின் ஆதரவுடன் உறுப்பினராக வெற்றி பெற்று தொகுதியின் நீண்ட கால பிரச்சினைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட தற்போது களத்தில் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப் போவதாகவும், ஒவ்வொறு சட்டமன்ற தொகுதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் அறுபதாயிரம் கோடி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பல்லடம் சட்டம்ன்ற தொகுதியில் 5 மோடி மருந்தகம் திறக்கப்படும் எனவும், 500 இடங்களில் புதிதாக இ சேவை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் 1958 ஆம் ஆண்டு முதல் நிறைவேற்றப்படாத ஆனைமலை நல்லாறு குடிநீர் திட்டம், ரூபாய் பத்தாயிரம் கோடி செலவில் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்தது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் முக்கிய ஆவணங்களை வெளியுறவுத்துறையில் இருந்து பெற்றுள்ளதாக கூறி ஆவணங்களை வெளியிட்டு பேசினார், அப்போது கூறிய அண்ணாமலை, கச்சத்தீவு காங்கிரஸ் இலங்கைக்கு தாரை வார்த்ததற்கான ஆவணங்கள் இது வரை இல்லாதிருந்த நிலையில் தற்போது தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வெளியுறவு துறையில் இருந்து பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

ஆவணங்களின் அடிப்படையில் கடந்த 1875 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை அப்போதைய ராமநாதபுரத்தின் ராஜா வசம் இருந்ததாகவும், அப்போது எந்தவித பிரச்சனைகளும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் இலங்கை அரசு கச்சத்தீவு தங்களுடையது என சொந்தம் கொண்டாடி விமான படையின் துப்பாக்கி சுடும் தளம் அமைக்க முயற்சித்துள்ளதாக தெரிவித்தார். 1961 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு கச்சத்தீவு குறித்து பதிவிட்ட ஆவணங்களில் குட்டித்தீவிற்கு எந்தவித மரியாதையும் தரப்போவதில்லை எனவும் குறிப்பிடிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் 1960 ஆம் ஆண்டு உள்துறை துணை செயலாளர் கிருஷ்ணாராவ் கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தமானது என குறிப்பிட்டிருந்ததாகவும், 1958 ஆம் ஆண்டு அப்போதைய அட்டர்னி ஜெனரல் சிட்டில் வார்ட் கச்சத்தீவை பாதுகாப்பு காரணங்களுக்காக போராடி பெற வேண்டும் எனவும் குறிப்பிடிருந்ததாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் 1968 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இலங்கை பிரதமர் சனநாயகாவுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டு பின்னர் 1974 ஆம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து இந்திய மக்களுக்கு காங்கிரஸ துரோகம் இழைத்ததாக குற்றம் சாட்டினார். பல்வேறு பைல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது கச்சத்தீவை காங்கிரஸ் தான் இலங்கைக்கு தாரை வார்த்துள்ளதாக கூறி வெளியிட்டுள்ள ஆவணங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button