திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளிநகர் பகுதியில் குப்பை கிடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பயன்பாட்டிற்காக, அரசால் வழங்கப்படும் ரேசன் அட்டைகள் சிதறிக்கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, பல்லடம் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பையில் சிதறிகிடந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் குப்பையில் கண்டெடுக்கப்பட்டது திருப்பூர் தாராபுரம் சாலை பகுதியில் உள்ள பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 270க்கும் மேற்பட்ட குடும்பத்தாரின் ரேஷன் அட்டைகள் (ஸ்மார்ட் கார்டுகள்) என்பது தெரிய வந்துள்ளது. இத்துடன் நியாய விலை கடையில் பணியாற்றும் நபர்களின் விடுப்பு கடிதங்கள், போன்றவைகளும் வீசப்பட்டுள்ளன. குப்பை கிடங்கில் வீசப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் காலாவதியனதா அல்லது பொதுமக்களுக்கு புதிதாக வழங்குவதற்காக அச்சிடப்பட்டதா, மேலும் படிவங்களும் இருந்ததால் அரசு அதிகாரிகளால் அலட்சியமாக தூக்கி வீசப்பட்டதா என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் சற்றும் சம்பந்தமே இல்லாமல் பெரிச்சிபாளையத்தில் இருந்து அறிவொளி நகர் குப்பை தொட்டியில் குடும்ப அட்டைகளும், ஆவணங்களும் கொட்டப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரேசன் அரிசி அதிக அளவில் கடத்தப்பட்டு வரும் நிலையில் இது போன்று ரேசன் அட்டைகள் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அரசு அங்கீகாரமாக கருதப்படும் ரேசன் கார்டுகள் குப்பைத்தொட்டியில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.