குழந்தைகளை அச்சுறுத்தும் தெருநாய்கள் ! கண்டுகொள்ளாத பழனி நகராட்சி நிர்வாகம் !

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் உள்ள இந்திரா நகரில், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அப்பகுதியினர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தெருவில் குழந்தைகள் தனியாக செல்லும்போது, கூட்டமாக சேர்ந்துகொண்டு குழைத்து விரட்ட தொடங்குகிறது. இப்பகுதியில் அதிகரித்துவரும் தெருநாய்களை அப்புறப்படுத்த பலமுறை புகார்கள் கொடுத்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதியினர் புலம்புகின்றனர்.

மேலும் இது சம்பந்தமாக விசாரித்தபோது, இந்திரா நகர் பகுதியானது வசதியானவர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியாகும். இப்பகுதியில் உள்ள செயின் பீட்டர் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் அருகே ஏராளமான தெருநாய்கள் திரிந்து வருகிறது. காலை, மாலை வேளைகளில், சொரி பிடித்த நாய்கள் கடித்தால் குழந்தைகளின் நிலை என்னவாகும் என்கிற அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகளை தனியாக பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்படுகின்றனர்.

இந்திரா நகர் பகுதியினர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெருநாய்களை அப்புறப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.