பழனி அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்தது என்ன ? அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன் ?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள நெய்காரபட்டியில், அரசு உதவி பெறும் ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நெய்காரபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் விடுதியில் தங்கி பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் விடுதி மற்றும் பள்ளி கட்டணம், கல்வி உதவி தொகை என பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், தலைமை ஆசிரியையாக பொறுப்பு வகித்து வந்த விஜயா என்பவர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கிய உதவித் தொகையை கையாடல் செய்ததாக, பள்ளி நிர்வாகம் சார்பில் பழனி தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரில் 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த போது சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரையில் விஜயா முறைகேடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் புகாரைப் பெற்று கொண்டு விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியை விஜயா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக அப்பகுதியில் விசாரித்தபோது, பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பதும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும் என பல பிரச்சனைகள் உள்ளதாக கூறுகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வந்த விஜயா, பல ஆண்டுகளாக பள்ளியின் வங்கி கணக்கிலிருந்து ஆறு லட்சம் பணத்தை முறைகேடு செய்ததாக கூறும் பள்ளி நிர்வாகம், இத்தனை ஆண்டுகளாக பள்ளியின் வங்கி கணக்கை கவனிக்காமல் இருந்திருப்பார்களா ? என்கிற கேள்வியை எழுப்புகின்றனர்.
மேலும் இதே பள்ளியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இரண்டு பள்ளி வாகனங்கள் தீ பிடித்து எரிந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த சம்பவம் குறித்து எந்தவித செய்தியும் வெளியாகாமல் பார்த்துக்கொண்ட ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், இப்போது ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கிய நிதியை கையாடல் செய்ததாக கூறி விஜயா என்பவர் மீது புகார் கொடுத்துள்ளது. மேலும் பள்ளியின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் பள்ளியின் பெயரை வெளியிடாமல் பார்த்துக்கொண்டது.
ஸ்ரீ ரேணுகாதேவி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நடந்தேறி வருகிறது. இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத, தொடர் பிரச்சனைகள் நடந்து இந்தப்பள்ளியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கா.சாதிக்பாட்ஷா