பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் !
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று கட்ட போராட்டமாக தொடரும் போராட்டத்தில் கடந்த 13.02.2024 அன்று ஒட்டுமொத்த ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். முன்னதாக கடந்த மே மாதம் சென்னை வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின் போது வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதன் பிறகு தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அமைச்சர் போராட்ட களத்திற்கு நேரில் வந்து அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 16.05.2023 அன்று வருவாய்த்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையில் ஒருமாத காலத்தில் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளனர். கடந்த 9 மாதங்களாக அரசு உயர் அலுவலர்கள், அமைச்சர்களை வலியுறுத்தியும் முக்கிய கோரிக்கைகளின் மீது அரசாணை வழங்கப்படவில்லை.
மேலும் பணியிறக்கம் காரணமாக மூன்று அலுவலர்கள் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், காலதாமதத்தை ஏற்க இயலாது என்கின்றனர். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் நிலையில் அதற்கு முன்னதாக அரசாணை பெற வேண்டி அவசியம் உள்ளது. இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதற்கான விதி திருத்தம் மேற்கொள்ள தொடர்ந்து போராடி வருவதாக கூறுகின்றனர்.
மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக பணியிடங்களை நிரப்பிடவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் இறுதிக்கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இம்மாத கடைசியில் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். தமிழக அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு அரசு விரைவாக தீர்வு காண வேண்டுமென சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கா.சாதிக்பாட்ஷா