ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் ! எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது. ஒன்றிய அரசு நிதியிலிருந்து சாக்கடை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்க உள்ள நிலையில், கடைகளின் முன்பாக அப்பகுதியினர் ஆக்கிரமிப்பு செய்து தடுப்புகளை அமைத்திருந்தனர். தடுப்புகளை அகற்றிட காரத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தால் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு கடந்த பல நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரும்பாலானோர் தடுப்புகளை அகற்றி ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், ஒரு சில கடையின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள தடுப்புகளை அகற்றாமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக சில தினங்களுக்கு முன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் அளவீடு செய்யப்பட்டு, மடத்துக்குளம் வட்டாட்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். அப்போது பொதுமக்கள் பெரும்பாலானோர் அப்பகுதியில் கூடியதால், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.