தமிழகம்

கொளத்தூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி !

சென்னை கொளத்தூர் அடுத்த பாலாஜி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவில் நகை அடகு கடை வைத்திருப்பவர் மதன்லால். இவரது கடைக்கு கடந்த 5 ஆம் தேதி அன்று மாதவன் என்ற நபர் நான்கு சவரன் நகையை ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து பணம் பெற்று சென்றுள்ளார். பின்னர் அந்த நகையை பரிசோதித்துப் பார்த்த போது அது போலி நகை என தெரியவந்ததால், தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த மதன்லால் உடனே இதுகுறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கலைச்செல்வி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி யில் பதிவான நபரை அவர் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தபோது, அங்கு அவர் வசிப்பதாக கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து கொளத்தூர் சரக காவல் நிலைய உதவி ஆணையர் சிவகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், பெருங்களத்தூர் அடுத்த பீர்க்கண்கரணை பகுதியில் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார் கையும் களவுமாக மாதவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.

பின்னர் இவரது வீட்டில் கவரிங் நகை செய்யும் பட்டறை வைத்து தொழில் செய்து வருவதாகவும், பிரபல நகை கடைகளில் உள்ள ஹால்மார்க் முத்திரையை போலியாக தயாரித்து உண்மையான நகை போல் செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த திறமையை பயன்படுத்தி இவர் மாதவரம், தண்டையார்பேட்டை, கொளத்தூர் மற்றும் பல இடங்களில் போலி நகையை அடகு வைத்து அந்த பணத்தில் உல்லாசமாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இவர் மீது பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் இவர் மீது வழக்கு பதிவு செய்து இவரிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்ததோடு, ஹால்மார்க் போலி முத்திரைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த மோசடியில் இவர் மட்டும்தானா ? அல்லது இதன் பின்னனியில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா ? என்பதையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button