கட்டிடத்தில் மரம் வளர்க்கும் திருப்பூர் மாநகராட்சி
திருப்பூரில் மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தின் மீது மரம் வளரும் அளவிற்கு சேதமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் செல்லும் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிகவளாக கட்டிடம் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் 35 கடைகள் உள்ளன. மேலும் ரயில் நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அபாய கட்டத்தில் உள்ளது.
கடை ஒன்றிற்கு சுமார் தலா 4 ஆயிரம் என மாதா மாதம் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் போதிய பராமரிப்பின்றி செயல்படும் இந்த மாநகராட்சி வணிகவளாகத்தினால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
மேலும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு அதில் மரம் வளரும் அளவிற்கு அலட்சியத்துடன் நடந்துகொள்ளும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதம் அடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து தள்ளும் அரசு இது போன்ற பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள் மீதும் அக்கரை செலுத்தவேண்டும்.
– நமது நிருபர்