சினிமாதமிழகம்

போதையில் கார் ஓட்டும் நடிகர்கள்: தொடர்கதையாகும் சம்பவங்கள்

மதுபோதையில் நடிகர்கள் கார் ஓட்டுவதும், அவர்கள் பொது மக்களிடம் சிக்கி பிரச்னை செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

ஹீரோக்கள், யதார்த்த வாழ்க்கையிலும் நாயகர்களாகவே கொண்டாடப்படுகின்றனர். அப்படி மக்கள் அளித்த இந்த அங்கீகாரத்தை மறந்து அவர்கள் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி நடிகர் அருண் விஜய் சென்னை நுங்கம்பாக்கம் அருகே மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று காவல்துறை வாகனம் மீது மோதிவிட்டு தலைமறைவானார். அப்போது அவர் மீது புகார் அளிக்கப்பட்டது, பின் அச்சம்‌பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ஜெய், தனது ஆடி காரை மதுபோதையில் தாறுமாறாக ஓட்டி, சென்னை அடையாறு பாலத்தின் மேல் மோதினார். இந்தச் சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜெய் காவல்துறையிடம் சரணடைந்தார். பின் அவரின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்ட சம்பவமெல்லாம் நீண்ட கதை.

இதேபோல் மது போதையில் தனது பி.எம்.டபிள்யூ. காரை தாறுமாறாக ஓட்டியதாக பிரபல நடிகரும் இயக்குநரும், பாராதிராஜாவின் மகனுமான மனோஜ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அவரை மடக்கிபிடித்த காவலர்கள், மனோஜுக்கு அபராதம் எச்சரித்து அனுப்பினர்.

இந்தச் சர்ச்சையில் அடுத்ததாக சிக்கியது நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம். மதுபோதையில் கார் ஓட்டிச் சென்றபோது அடையாறு திரு.வி.க மேம்பாலத்தின் அவரை தடுத்து நிறுத்திய காவலர்கள், அபராதம் விதித்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டிற்கு காய்த்ரி ரகுராம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இறுதியாக, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்தி, மதுபோதையில் சூளைமேடு பகுதியில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். அவிழ்ந்து விழும் வேட்டியை சரியாக கட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை கைது செய்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மனம் வருந்திய அவர், முகநூலில் வருத்தம் தெரிவித்து‌ பதிவிட்டுள்ளார். இவ்வாறு பல நடிகர்கள் அவ்வபோது பிரச்னையில் சிக்கி ஜாமீனில் விடுவிக்கப்படுவதுமாகவே உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button