திறந்தவெளி ‘பாராக’ மாறிய சோமனூர் பஸ் ஸ்டாண்ட் : அச்சத்தில் பயணிகள் !
சோமனூர் பஸ் ஸ்டாண்ட், இரவில் குடிமகன்களின் திறந்த வெளி பாராக மாறியுள்ளது என, பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை சோமனூரில், 2017ம் ஆண்டு செப்., 14ம் தேதி, காலையில், பயணிகள் பஸ்காக காத்திருந்த போது, பஸ் ஸ்டாண்டின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
சம்பவம் நடந்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும், இங்கு புதிய கட்டிடம் கட்டப்படாமல், இடிந்த நிலையிலேயே இருந்தது. தற்போது மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டிடம் கட்ட, அரசு உத்தரவிட்டதால், கடந்த 1ம் தேதி பூமிபூஜை போடப்பட்டது. பூஜை நடந்து இரண்டு வாரங்களாகியும் இன்னும் எந்த பணியும் துவங்கவில்லை.தினமும், 66 பஸ்கள் வந்து செல்கின்றன. நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு நின்று பஸ் ஏறுகின்றனர். நிழல்குடை, கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில், பஸ் ஸ்டாண்டுக்குள் மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த இருட்டை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள், பஸ் ஸ்டாண்டை திறந்த வெளி பாராக பயன்படுத்தி, குடித்துக் கும்மாளம் போடுகின்றனர்.பூமி பூஜை நடந்த இடத்தின் அருகில், காலி மதுப்பாட்டில்களும், குடிநீர் பாட்டில்களும் குவிந்து கிடக்கின்றன. சிலர் பாட்டில்களை உடைத்து நொறுக்கி போட்டுள்ளனர்.
இரவு 7:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்டுக்குள் நின்று பஸ் ஏற பயணிகள் அச்சப்படுகின்றனர். இது போன்ற சமூக விரோத செயல்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பஸ் ஸ்டாண்டுக்குள் தற்காலிகமாக மின் விளக்குள் போட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் ஸ்டாண்டுக்கு அருகில், கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட போலீஸ் கண்காணிப்பு அறை உள்ளது. அந்த அறை செயல்படாமல் சில ஆண்டுகளாக பூட்டியே இருக்கிறது. இந்த கண்காணிப்பு அறையை போலீசார் செயல்படுத்தினால், இந்த பகுதியில் நடக்கும் பல சமூக விரோத செயல்களை தடுக்கலாம்.