ஆதிபராசக்தி கோயில் அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வர ஆய்வு!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் ஆய்வுசெய்ய வந்தபோது, கோயில் நிர்வாகத்தினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் நிர்வாகத்தினர்மீது மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை-& திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் முகவரி. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் வந்துசெல்வது வழக்கம்.
இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவர சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வுசெய்ய, காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தலைமையில் நான்குபேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவினர், கோயில் நிர்வாகத்தினரிடம் விவரங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்க மேல்மருவத்தூர் சித்தர் ஆதிபராசக்தி பீடத்திற்கு வந்திருந்தார்கள். அங்கிருந்த கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த அதிகாரிகள், அவர்களிடம் இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
கோயில் நிர்வாகத்தரப்பிலோ, ‘உங்களை ஆய்வுசெய்ய அனுமதிக்க முடியாது. நாங்க உயர் அதிகாரிகளிடம் பேசிக்கொள்கிறோம்.’ எனக் கறாராகச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள், தாங்கள் கொண்டுவந்த அறிவிப்பை கோயில் நிர்வாகச் சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனர். மேலும் காவல் நிலையத்திற்குச் சென்ற உதவி ஆணையர் ரமணி, அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் அங்கிருப்பவர்கள் தடுத்ததாகவும் கோயிலை ஆய்வுசெய்ய உரிய பாதுகாப்பு வழங்கவேண்டியும் அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆதிபராசக்தி கோவிலை ஆய்வு செய்ய உத்தரவிட்ட, வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபாலை பணியிடை மாற்றம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. வேலூர் மண்டல இணை ஆணையராக இருந்த தனபால், சிவகங்கை இணை ஆணையராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலவன், வேலூர் இணை ஆணையரின் அனைத்து பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 28 கோடி ரூபாய் மதிப்பில் தமிழக அரசு சார்பில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆதிபராசக்தி கோவிலை தமிழக அரசு கைப்பற்றும் எண்ணமில்லை எனக் கூறினார்.