குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை ! காவல்துறை எச்சரிக்கை
சென்னை எண்ணூர் பகுதியில், சாத்தாங்காடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மோதிநகரைச் சேர்ந்த தேவி என்ற பெண் தனது குழந்தைகளைக் கடத்த முயன்றனர் என வீடியோ வெளியிட்டுள்ளார். இவரது வீடியோ வெளியானதிலிருந்து அந்தப் பகுதியே பரபரப்பான நிலையில், 15 பேர் கொண்ட கும்பல் குழந்தைகளைக் கடத்த அந்தப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும், கொடூரமான முறையில் குழந்தைகளின் உடலுறுப்புகளை எடுத்து விற்பனை செய்யும் கும்பல் என்றும், அதில் ஒருவன் பிடிபட்டுள்ளான் எனவும், பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
கடந்த ஐந்து நாட்களாக வடசென்னை பகுதியில் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், என பரவிய செய்திகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல் துறையினர் விழிப்புணர்வுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அந்தப் பகுதியின் முக்கியஸ்தர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். பின்னர் இரவு பகலாக கண்காணித்ததில், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பதிவுகள் போலீயான செய்திகள் என கண்டுபிடித்துள்ளனர்.
இதுசம்பந்தமாக ரெட்கில்ஸ் காவல் சரக துணை ஆணையர், எண்ணூர் உதவி ஆணையர், சாத்தாங்காடு காவல்நிலைய ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சமூகவலைத்தளங்களில் பரவிய தகவல்கள் போலியானது, இதுபோன்ற செய்திகளை நம்பி யாரும் பயப்பட வேண்டாம். காவல் துறையினர் 24 மணிநேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்களது தொடர்பு எண்களைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தினர். மேலும் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தவறான தகவல்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.