நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா ?.!
சேலம் மாவட்டத்தில் அதிமுக உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மீது, சேலம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஏவி ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதிமுக ஆட்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்ச ரூபாய் வசூலித்து ஏமாற்றியுள்ளார். ஏவி ராஜூ வசூலித்துக் கொடுத்த 40 லட்சம் ரூபாயையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் சேலம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி சேலம் மாநகர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஏவி ராஜூ வை கட்சியிலிருந்து நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பின்னர் இதுசம்பந்தமாக செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றியச் செயலாளர் ஏவி ராஜூ கூறுகையில்… பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கம் செய்ததாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். ஒருவரை நீக்க வேண்டுமானால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கட்சியின் அடிப்படை விதிகள் எதுவும் தெரியாத இவர் எப்படி என்னை கட்சியிலிருந்து நீக்க முடியும் ? நான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே என்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன்.
பழனிச்சாமிக்கு திறமை இருந்தால் இரண்டு மாவட்டச் செயலாளரை நீக்க முடியுமா ? அவரைப் பார்க்கப் போனால் அவருடன் இருக்கும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு முறையும் 10 ஆயிரத்திற்கும் மேல் கொடுக்க வேண்டும். அவருடன் கட்சியில் பயணித்ததே கேவலம் என நினைக்கிறேன். பால்பண்ணையில் நான் இயக்குனராக இருந்தபோது இவர்கள் செய்த ஊழல் பட்டியலை வெளியிடவா ? மகளீர் அணியினர் கொடுத்த புகார் கடிதத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் இவருக்கு புரட்சித் தமிழர் பட்டம் தேவையா ? என்ன புரட்சி செய்துள்ளார் பழனிச்சாமி.
கிளைச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் என அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து வந்தவன் என மேடை தோறும் வாய்கிழிய பேசுகிறாரே, இவர் எந்த ஆண்டு ஒன்றியச் செயலாளர் பதவி வகித்தார் ? ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்ததற்கான ஆதாரத்தை பழனிச்சாமியால் காட்டமுடியுமா ? பாவம் இவரை நம்பி நடிகை கவுதமி, காயத்ரி ரகுராம் போன்றோர் அதிமுகவில் இணைந்துள்ளார்கள், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பழனிச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் ஏவி ராஜூ.