கும்பகோணம் அருகே மாநகராட்சி ஊழியர் எனக்கூறி நகை திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது !
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தி மெயின் ரோடு, வெங்கடேஸ்வரா தெருவில் வசித்து வருகிறார் தர்மராஜ். இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன், கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள் எனக் கூறி இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அப்போது பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் உங்கள் வீட்டிற்கு தண்ணீர் தொட்டி அமைக்க உள்ளதாகவும், தொட்டி வைக்கும் இடத்தை காண்பித்தால் அந்த இடத்தை நாங்கள் அளவு எடுத்துக் கொள்வோம் என கூறி, தர்மராஜை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது மற்றொரு நபர் தர்மராஜின் வீட்டிற்குள் நுழைந்து, பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். பின்னர் நகைகள் திருடு போனதை அறிந்த தர்மராஜ், பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்த போலீசாரின், பல கட்ட விசாரணைக்குப் பிறகு, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா, சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் வீரபத்திரன் என்பவரைப் பிடித்து 17 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்பிறகு குற்றவாளி வீரபத்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இரண்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
_அப்துல் மாலிக்,
மாவட்ட செய்தியாளர்.