பல்லடம் அருகே கோழிப்பண்ணை உரிமையாளரிடம், 23 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ரூபாய் 50,000 க்கு மேல் ரொக்க பணம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லும் நபர்களை கண்காணிக்க தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பல்லடம், புத்தரச்சல் அருகே பார்த்திபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவலர்களுடன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ருத்ராவதியிலிருந்து பல்லடத்தை நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் வாகனத்தில் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. விசாரணையில் வாகனத்தில் வந்தது கோழிப்பண்ணை உரிமையாளர் மயில்சாமி என்பதும், பல்லடத்தில் உள்ள தனியார் வங்கியில் பணம் செலுத்த கொண்டு சென்றது என தெரிய வந்துள்ளது.
ஆனால் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர். உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை கருவூலத்தில் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.