பல்லடத்தை பாடாய் படுத்திய இளைஞர் பட்டாளம்..! போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த ஓடா நிலையில், சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆம் ஆண்டு நினைவு நாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் திரு உருவச் சிலைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே கோவையிலிருந்து ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும் அணிவகுத்துச் சென்றனர். அவ்வாறு செல்லும் வாகனங்களில், காதை கிழிக்கும் அளவிற்கு ஹாரன்களை அடித்தபடியும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும், பட்டாசு வெடித்தபடி சென்றனர். இதனிடையே பல்லடத்தில் பிரதான சாலையான கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செட்டிபாளையம் பிரிவு அருகே பைக்குகளை சாலையில் தாறுமாறாக நிறுத்தி, பட்டாசு வெடித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தினர்.
பின்னர் பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த கும்பல் அங்கு பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்லடம் நான்கு ரோட்டிற்கு வந்தவர்கள், எதிர் திசை வாகனங்களை வழி மறித்து பைக்குகளை நிறுத்தி ஆட்டம் போட்டனர். அப்போது அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அறிவுறை கூறியதை ஏற்காமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். பின்னர் அங்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை மற்றும் உதவி ஆய்வாளர் இசக்கி ஆகியோர், ஆட்டம் போட்ட இளைஞர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
ஆனால் ஆய்வாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு வாகனங்களை சாலையில் நிறுத்தி ஆட்டம்போட்டு பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தினர். மேலும் தாங்கள் வந்த வாகனத்தின் பதிவெண்ணை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த டி எஸ் பி விஜயகுமார் இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
சுதந்திரம் பெற்றுத்தர போராடிய தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை போற்றும் விதமாக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டிய இளைஞர்கள் இது போன்று சாலையில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரை எதிர்ப்பது தங்களுக்கு கவுரவம் என நினைத்து காவல்துறையினரிடம் பொது இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.