அரசியல்இந்தியா

ரபேல் போர் விமான ஒப்பந்தம்: இந்திய பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் 126 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
126 போர் விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் அதில் 18 விமானங்களை மட்டுமே பிரான்ஸ் நாடு பறக்கும் நிலையில் தயாரித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
அதில் மீதம் இருக்கும் 108 விமானங்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப விபரங்களை இந்தியாவிற்கு தர வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
108 விமானங்களை தயாரிப்பதற்கு ஏற்ப இடங்கள் மற்றும் இதர தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் முன்னேற்பாடாக செய்து வைத்திருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட்.
இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் மற்றொரு மைல் கல்லினை எட்டுவதற்காகவும் தயார் நிலையில் இருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட்.
இந்தியாவில் தயாராக இருந்த 108 விமானங்களையும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் தயாரிப்பதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், 2014ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய பாஜக ஆட்சி அமைத்தது.
2015ம் ஆண்டு அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் போடப்பட்ட 126 ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார்.
புதிதாக ஒப்பந்தம் ஒன்றிற்கு கையெழுத்திட்டார் மோடி. அதன்படி 18 விமானங்களுக்கு பதிலாக பறக்கும் நிலையிலேயே சுமார் 36 விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக கூறினார்.
பறக்கும் நிலையில் விமானங்கள் வாங்கப்பட்டாலும் அதனுள் பல்வேறு தொழில் நுட்பக் கருவிகளை பொருத்தும் பணியையும் அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியையும் இந்தியா மேற்கொள்ளும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸல்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கு தர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாத நிலையில் ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை தேர்வு செய்தது டஸ்ஸல்ட் நிறுவனம்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உள் நாட்டிலேயே விமானங்களை தயாரிக்காமல் எப்படி அனைத்து விமானங்களையும் பறக்கும் நிலையிலேயே வெளியில் இருந்து வாங்கக் கூடும் என்று கேள்வி எழுப்பினர்.
பல்வேறு ஆண்டுகளாய் அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனம் இருக்கும் போது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
58,000 கோடி ரூபாய் என்பது அதிகபட்ச விலை என்றும், காங்கிரஸ் கட்சி இறுதி செய்து அறிவித்த தொகையை விட 3 மடங்கு அதிக பணம் இதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினர். மக்களின் வரிப்பணத்தையும் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 79200 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த தொகையை கணக்கிட்டுப் பார்க்கும் போது 36 விமானங்களின் விலை என்னவோ 22600 கோடி ரூபாய் தான். ஆனால் 36 விமானங்களை ஏன் 58000 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.
இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது. இதில் மத்திய அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிற்கு ரபேல் விமானங்களை வழங்கும் டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரரை யார் தேர்வு செய்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக வேறு நிறுவனம் (ரிலையன்ஸ்) எப்படி தேர்வு செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நாங்கள், டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரரை தேர்வு செய்யவில்லை. அதை தேர்வு செய்தது டசால்ட் நிறுவனம்தான் என்று கூறியது. ஒப்பந்த முறைப்படி அதற்கான உரிமை டசால்ட் நிறுவனத்திற்குத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் அதை தேர்வு செய்தது என்று கூறியது.மேலும் எங்களுக்கு டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து நீதிபதி கேஎம் ஜோசப், ‘என்ன பதில் இது. ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட போகும் பங்குதாரர் தெரியாமல் விமானம் வாங்குவது, மக்கள் மீது அக்கறை இல்லையா? இந்திய பாதுகாப்பு மீது அக்கறை இல்லையா? இந்த ஒப்பந்த விதிகளை யார் மாற்றியது, எதன் அடிப்படையில் இதை மாற்றினீர்கள்’ என்று சரமாரி கேள்வி கேட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button