அரசியல்

பாஜகவை சீண்டும் அன்வர் ராஜா

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் சிறுபான்மையினர் பிரிவின் செயலாளருமான அன்வர் ராஜா இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியை கைப்பற்றும் நோக்கத்தில் அதிமுக தலைமையின் கவனத்தை தன்பக்கம் திசை திருப்புவதற்காக சமீபகாலங்களில் அரசியல் அனுபவத்தையும், நாகரீகத்தையும் மறந்து மூன்றாம்தர அரசியல் வாதியைப் போல் பொதுநிகழ்ச்சியில் பேசி வருகிறார்.

இதுகுறித்து இராமநாதபுரம் அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், அன்வர் ராஜா மூத்த அரசியல்வாதி. அதனால்தான் கடந்த முறை இவருக்கு ஜெயலலிதா பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கி எம்பி ஆக்கினார். அதன்பிறகு வஃக்பு வாரிய தலைவராக்கினார். ஜெயலலிதா இருக்கும்வரை வாயை மூடிக் கொண்டுதான் இருந்தார். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு வஃக்பு வாரியத்தில் தனது கைவரிசையை காண்பித்ததாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். மதுரையில் உள்ள வக்பு வாரிய கல்லூரியில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் ஏராளமாக பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இரவு பகலாக இவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றியதாக தெரியவருகிறது. மதுரையிலும் வீடுகளை வாங்கி இருப்பதாக பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தது.

இந்த வழக்கில் தற்போது ஒரு சிலர் மீது சிபிஐ சார்ஜ் பிரேம் செய்துள்ளதாகவும் முக்கிய நபர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.
இந்த ஆட்சி இருப்பதால் காலம் கடத்தலாம். அதன்பிறகு நிலைமை மோசமாகி விடும் என்கிற பயம் அவரை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது. அதனால் தான் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வாங்கி சட்டமனற உறுப்பினராக வந்தால் கட்சியையும் பதவியையும் பயன்படுத்தி வழக்குகளை காலம் கடத்தலாம் என்கிற எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு, தான் மூத்த அரசியல்வாதி என்பதை மறந்து பதட்டத்தில் உளற ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசும்போது திமுக ஆட்சிக்கு வந்து நீட்தேர்வை ரத்து செய்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பேசினார். தோல்விக்கு தற்கொலை தீர்வல்ல என்று உலகின் பல அமைப்புகளும் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாக பேச வேண்டிய மூத்த அரசியல்வாதியான அன்வர்ராஜாவே இப்படி பேசுவதை அதிமுகவினரே விரும்பவில்லை. இதேபோல் பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடியை எவன் எதிர்த்தாலும் அவன் அவுட் ஆவான். ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து கவர்னர் கூட்டம் நடத்தினார். முதலமைச்சரை கவிழ்த்த நினைத்தார். ஆனால் திடீரென சிவகாசியில் இருந்து ஒரு பேராசிரியை வந்தார். அதோடு கவர்னர் அவுட் ஆனார்.

சிவகாசியில் இருந்து பேராசிரியை வந்ததும் ஐய்யோ என்னால் விளக்கம் அளிக்க முடியாது. அந்த அம்மாவிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக்கூறி கவர்னர் அமர்ந்துவிட்டார். ரஜினிகாந்தை வைத்து ஏதாவது பண்ணலாம் என நினைத்தார்கள். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அவராகவே அவுட் ஆகிவிட்டார் என்று பாஜகவையும், கவர்னரையும் சீண்டினார். அதிமுக தலைமையில் இருப்பவர்களே பாஜகவை பார்த்து அடக்கி வாசிக்கும் போது இவர் தலைமையில் கவனத்தைப் பெறுவதற்காக பேசி வருகிறார். ஏற்கனவே சசிகலாவை பற்றி இவர் பேசியது அதிமுகவில் சலசலப்பானது.

அன்வர்ராஜா என்னதான் பேசினாலும் இவருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கப் போவதில்லை. அப்படியே வாய்ப்பு கொடுத்தாலும் பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பதால் கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இவரது வாகனத்தில் பாட்டில் வீசப்பட்டது இவருக்கு ஞாபகம் இருக்கும். இஸ்லாமியர்கள் யாரும் இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இஸ்லாமிய மக்களே இவருக்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அதிமுக தற்போது இராமநாதபுரம் சட்டமனற தொகுதியை தக்கவைத்துள்ளது. அன்வர்ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கினால் இந்த தொகுதியை இழக்க நேரிடும். இதற்கெல்லாம் காரணம் சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள்தான்.

உருப்படியாக எதுவும் பேசத்தெரியாதவர்கள் தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதாக நினைத்து இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற பேச்சுக்களில் ஈடுபடுகிறார்கள். இவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் இதுபோன்ற பேச்சுக்களை பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.

வெ.சங்கர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button