சினிமாவிலும் சரி, நிஜவாழ்க்கையிலும் சரி பரபரப்பாக பேசுவது ரஜினிக்கு ஒன்றும் புதிது இல்லை. ஏனென்றால், அவர் ஒரு தடவை சொன்னா… அது பல லட்சம் ரசிகர்களை ஈர்க்கும்! அப்படி பேசுவது அவரது இயல்பு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அவர் பேச்சை அப்போதைய அரசியல் தலைவர்களும் எதிர்பார்த்தார்கள், இப்போதைய தலைவர்களும் எதிர்பார்க்கிறார்கள். ‘மன்னன்’, ‘படையப்பா’, ‘அண்ணாமலை’ போன்ற படங்களில் அவர் மறைமுகமாக யாரை எதிர்த்தார் என்பது தமிழக ரசிகர்கள் அறிந்ததுதான்.
அவர் நடித்த ’பாட்ஷா’ படத்தின் வெள்ளி விழாவில்தான் முதன்முறையாக பொங்கி எழுந்தார் ரஜினி. அந்த விழாவுக்கு சில நாட்களுக்கு முன் தான் இயக்குனர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்திருந்தது. அன்றைய அவரது பேச்சு பரபரப்பாகப் பேசப்பட்டது. எப்போதும் அரசியலையும் ஆட்சியாளர்களையும் வெளிப்படையாக பேசாத ரஜினி, அன்று அதிரடியாகத் தாக்கிப் பேசினார். ’வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது’ என்றார். அப்போது அவருக்கு ஆதரவு பெருகியது. இதையடுத்து நடந்த ஆட்சி மாற்றத்துக்கு ரஜினியின் பேச்சும் காரணமாக அமைந்தது. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு அதிரடி பேச்சு, அவரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. அது பல சர்ச்சையையும் ஏற்படுத்துவது வழக்கமானதுதான். ‘எதையும் அவர் இயல்பாகவே பேசுகிறார், தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறார்கள்’ என்று சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், ’நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவிரி பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். எனக்கு அரசியல் ஆசை இல்லை. நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார். இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார் ரஜினிகாந்த். அப்போது இது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் நடந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினி, ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ‘இந்த விழாவுக்கு கருணாநிதியை அழைத்திருக்க வேண்டும்’ என்று பேசி பரபரப்பாக்கினார். இதை எதிர்பார்க்காத அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்’ என்றார் பரபரப்பாக. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். அவர்களை பார்க்கச் சென்று திரும்பிய ரஜினி, அளித்த பேட்டியில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சும் சர்ச்சையானது. ஆனால், தனது கருத்தில் உறுதியாக இருந்தார் ரஜினி. அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.
சமீபத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளாத முதலமைச்சர் பற்றி குறிப்பிட்டு, ’கலைஞரின் இறுதி அஞ்சலிக்கு எல்லா அரசியல் தலைவர்களும் வந்திருக்கும்போது தமிழக முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவை விட பெரிய தலைவர்களா? என்று கேட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை போல ‘யார் அந்த 7 பேர்?’ என கேட்டிருக்கிறார் ரஜினி. இதுவும் பெரும் சர்ச்சையாக மாற, விளக்கம் கொடுத்திருக்கிறார். ரஜினிகாந்தின் தன்னை இன்னும் முழு அரசியல்வாதியாக உணரவில்லை. சாதாரண மக்களின் எண்ணத்தையே அவரது பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. அவர்கள் என்ன நினைப்பார்களோ, அதைதான் அவரது பேச்சும் பிரதிபலிக்கிறது.
‘யார் அந்த 7 பேர்?’ என கேட்டது தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த், “7 தமிழர்கள் விடுதலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது. கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் பதிலளித்திருப்பேன். எடுத்த எடுப்பில் கேள்வி கேட்கப்பட்டதால் திணறிவிட்டேன். அது தொடர்பாக எதுவும் தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை. பரோலில் வந்த பேரறிவாளனிடம் 10 நிமிடம் பேசியவன் இந்த ரஜினி, தெரிந்தால் தெரியும் என்று கூறிவேன். தெரியவில்லை என்றால் தெரியாது என்று கூறுவேன்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டார்கள். அதனால், மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 7 பேரின் விடுதலை செய்வது குறித்து ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும். சர்கார் விவகாரத்தில் படம் நிறுத்தப்பட்டது, பேனர் கிழிக்கப்பட்டது வன்முறையாகும். அதனை கடுமையாக எதிர்க்கிறேன்.
பாஜக ஆபத்தான கட்சி என நான் கூறவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு பாஜக ஆபத்தான கட்சி என்றால், அவர்களுக்கு அது ஆபத்தானதுதான். பாஜக மக்களுக்கு ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் கூற வேண்டும். பாஜக ஆபத்தானதா என்பதை இப்போது நான் சொல்ல முடியாது. முழுநேரமாக அரசியலில் இறங்கிய பின் அன்றாட நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிப்பேன்.
10 பேர் ஒன்றாக சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால் அந்த கட்சிதான் பலம் வாய்ந்தது. நாங்கள் சம்பாதிப்பது குறித்து வருமான வரித்துறை தான் கேள்வி எழுப்ப வேண்டும். அவர் (முதல்வர்) ஏன் கேள்வி எழுப்புகிறார். இலவசங்கள் 100 சதவிகிதம் தேவை. ஆனால், எதற்காக கொடுக்கிறோம் என்பது முக்கியம். ஓட்டுக்காக இலவசங்கள் கொடுக்கக்கூடாது” என்று கூறினார்.
7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிய ரஜினிகாந்த், பாஜக தொடர்பான கேள்விகளுக்கு மறைமுகமாகவே எல்லா பதில்களையும் தெரிவித்தார். பிரதமர் மோடி பலசாலியா? என்ற கேள்விக்கு, “10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் அவர் பலசாலிதானே” என்று மறைமுகமாக பதிலளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு, “அது அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறினார்.
ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிச.31ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்து அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் இதுகுறித்து முதல்முறையாக பேசினார். அதன் பின்னர் அவரது அரசியல் வருகை குறித்தும் கூட்டணி குறித்தும் பல யூகங்கள் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, எனக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறுகின்றனர். அது உண்மையல்ல. எனக்கு பின்னால் கடவுளும், மக்களுமே உள்ளனர் என்று அவர் கூறியிருந்தார்.