அரசியல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சுயநலத்திற்காக அதிமுகவை பயன்படுத்துகிறாரா பழனிச்சாமி..?

தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றித்தான். கொடநாடு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். ஜெயலலிதா தான் விரும்புகிற நேரம் எல்லாம் கொடநாட்டில் தான் ஓய்வெடுத்து வந்தார். அங்கு இருந்தவாறே அரசு நிர்வாகத்தை நிர்வகிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை அமைத்து வைத்திருந்தார்.

ஜெயலலிதா மறைந்து ஐந்து மாதங்கள் கூட ஆகாத நிலையில் கொடநாடு பங்களாவில் ஒரு கொள்ளை சம்பவம் நடைபெறுகிறது. அந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது ஒரு கொலை சம்பவமும் நடைபெறுகிறது. அதன்பிறகு அடுத்தடுத்து சந்தேக மரணங்கள் அரங்கேற தொடங்கும் போது மக்கள் அதிர்ச்சியோடு கொடநாடு சம்பவங்களை வாசிக்கத் தொடங்கினர்.

கொடநாடு பங்களாவில் என்ன இருந்தது?… எதை எடுத்துச்சென்றார்கள்?… அங்கு என்னதான் நடந்தது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் விரும்பினார்கள். ஆனால் இதுவரை யாராலும் அங்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. தெரிந்தாலும் வெளியில் சொல்ல முடியாத நிலைதான் கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்து வந்தது.

தற்போது ஆட்சி மாறிய நிலையில் கொடநாடு, கொலை, கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பதற்றம் அடைந்து ஸ்டாலின் தலைமையிலான அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சாலை மறியல் செய்து கவர்னரையும் சந்தித்து வந்துள்ளார். இந்த வழக்கில் பழனிச்சாமி ஏன் பதறுகிறார் என்ற சந்தேகம் மக்களுக்கு மீண்டும் எழுந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவில் ஒரு கும்பல் கொடநாடு பங்களாவிற்குள் நுழைகிறது. இந்த கும்பல் உள்ளே நுழைந்த போது அங்கு உள்ள சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்ட்டிருந்தது. அப்போது அங்கு இருந்த இரண்டு காவலாளிகள் உள்ளே வந்த கும்பலை தடுத்து நிறுத்த முயலும்போது அவர்களை சராமரியாக தாக்குகிறார்கள். இதில் ஓம்பகதூர் என்கிற காவலாளி கொலை செய்யப்படுகிறார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அடுத்தநாள் காவல்துறை வெளியிட்ட செய்தியில் கொள்ளை முயற்சி நடைபெற்றதில் 5 கைக்கடிகாரங்களும், கிரிஸ்டலால் செய்யப்பட்ட ஒரு அலங்கார பொம்மையும் தான் திருடு போனது என்று கூறப்பட்டது.

அதன்பிறகு நடந்த விசாரணையில் கொள்ளை கும்பலின் எண்ணிக்கை 11 பேர் என்றும் அதற்கு தலைமை வகித்தவர் கேரளாவைத் சேர்ந்த சயான் எனபவர் என்றும் கண்டுபிடித்து சயானை தேடுகிறது காவல்துறை. ஆனால் காவல்துறை கண்களில் சிக்காத சயானின் மீது கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனம் சயானின் காரின் மீது மோதுகிறது.

அதில் சயானுடன் பயணம் செய்த அவரது மனைவியும் மகளும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைகிறார்கள். அதன்பிறகு சயான் கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு எட்டு பேர் கைதாகினர். கைதானவர்கள் வாக்குமூலத்தில் கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு திட்டத்தை வகுத்து மூளையாக செயல்பட்டவர் கனகராஜ் என்பவர்தான் என்கின்றனர். கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர்.

கனகராஜின் பெயரை கைதானவர்கள் வெளியிட்ட உடனே சயானின் கார் விபத்துக்குள்ளான மூன்று தினங்களில் கனகராஜும் விபத்தில் மரணமடைகிறார். அதன்பிறகு கொடநாடு பங்களாவின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கிறார். அப்போது தினேஷ்குமாரின் சகோதரி எனது அண்ணனின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. எனது அண்ணன் தூக்கில் தொங்கிய கைலி எனது அண்ணனுடையதோ, அப்பாவினுடையதோ அல்ல என்றார். ஆனால் காவல்துறையில் இறந்தவரின இரத்த உறவான அவரது தங்கையின் வாக்குமூலத்தை கண்டுகொள்ளவில்லை. இதுவரை மர்மமான முறையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஆட்சயில் இந்த மரணங்கள் பற்றி முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

தற்போது பழனிச்சாமி ஏன் பதறுகிறார் என்றால் சயான் வாக்குமூலத்தில் நாங்கள கொள்ளையடித்த பொருட்களை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை கேரளாவிற்கும் மறு பாதியை மலைப்பிரதேசத்திலிருந்து கோவை வழியாக கொண்டு சென்றோம் என்று கூறியதாக தெரிய வருகிறது. ஆனால் பழனிச்சாமி ஆட்சியில் அப்போதைய காவல்துறை சொன்னது 5 கைக்கடிகாரமும், 1 பொம்மையும் தான் என்றார்கள். சயான் வாக்குமூலத்தில் சொல்லப்பட்டுள்ள பொருட்கள் என்னென்ன?… ஆவணங்களா?… நகைகளா?.. பணமா?… என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் காத்திருக்கிறார்கள். இதெல்லாம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக வழக்கை மீண்டும் விசாரணை செய்யவிடாமல் தடுப்பதற்காகத்தான் பழனிச்சாமி பதறினார் என்கிறர்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி வீடுகளில் சோதனை நடைபெற்ற போது பதறாத பழனிச்சாமி கொடநாடு கொலை, கெர்ளளை வழக்கு விசாரணை செய்ய விடாமல் தடுப்பதற்காக ஏன் பதற்றம் அடைந்து ஆளுநரை சந்திக்க வேண்டும் எனற சந்தேகம் அதிமுகவினர் மத்தியிலேயே நிலவுகிறது.

ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியை இழந்தபோதும் பழனிச்சாமி சுயநலத்திற்காக மட்டுமே அதிமுகவை பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளையும் அதிமுகவினர் முன் வைக்கிறார்கள்.

இந்த வழக்கை பொறுத்த வரையில் தமிழக அரசு நேர்மையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முகமது ஆரிப்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button