தமிழகம்

ஒரு நாளைக்கு 14 லட்சம் இட்லி, 9 லட்சம் சப்பாத்தி : அசத்தும் அம்மா உணவகம்…!

ஊரடங்கு உத்தரவால், உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

முதியவர்கள், தொழிலாளர்கள், பேச்சுலர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். சென்னையில் 200 வார்டுகளில் வார்டுக்கு 2 என்ற அடிப்படையில் 400 அம்மா உணவகங்களும், சென்ட்ரல், ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளிலும் மொத்தமாக 407அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகங்களிலும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும்  700 அம்மா உணவகங்கள் இயங்கிவருகின்றன.

சுமார் 12 லட்சம் பேர் இந்த உணவகங்களில் உணவருந்தி வந்தனர். ஆனால், ஊரடங்கு காலகட்டத்தில் சுமார் 30 லட்சம் பேருக்கு உணவு வழங்கிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தைவிட, ஊரடங்கு காலங்களில் அம்மா உணவகங்களில் 5 மடங்கு அதிகமாக உணவு விற்பனையாகிறது என்கிறது புள்ளிவிபரம்.தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் ஒரு நாளைக்கு 14 லட்சம் இட்லி, 9 லட்சம் சப்பாத்தி, 9 லட்சம் சாப்பாடு ஆகியவற்றை வினியோகித்துவருவதாக சொல்கிறது நகராட்சித்துறையின் புள்ளிவிபரம். அதிக வெளிமாநில தொழிலாளர்கள் வசித்துவரும் பெருங்குடி, உள்ளகரம் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அம்மா உணவங்கள் கட்டணமின்றி உணவு வழங்கிவருவதாக கூறுகிறார்  மூத்த மாநகராட்சி அதிகாரி.

உணவு தயாரிப்பு பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால், சமாளிக்கும் விதமாக, அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான மூலப்பொருட்களை சேமிப்பில் வைத்துள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button