தமிழகம்

போக்குவரத்தை சரி செய்யாமல் செல்போனில் பொழுதை கழிக்கும் போக்குவரத்து போலீசார்: நீதிபதி கண்டனம்

சென்னையில் போக்குவரத்து போலீசார் பலர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தாமல், சாலையோரம் உட்கார்ந்துக் கொண்டு செல்போனில் ஏதாவது ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கடும் கண்டனம் தெரிவித்தார்.

‘பச்சை விளக்கு எரியத் தொடங்கியதும், தன் கார் உள்பட சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் புறப்படும்போது, ஒரு பெண் சாலையை வேகமாக கடந்தார். ஆனால், எதையும் கண்டு கொள்ளாமல், போக்குவரத்து போலீசார் தன்னுடைய செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோரது கவனத்துக் கொண்டு செல்லவேண்டும்’ என்று அரசு குற்றவியல் வக்கீல் முகமது ரியாசிடம் நீதிபதி கூறினார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அரசு குற்றவியல் வக்கீல் ஆஜராகி, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகளை தாக்கல் செய்தார்.

அதில், ‘போலீசார் எந்நேரமும் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக புகார்கள் ஏராளமாக வருகின்றன. போலீஸ் பணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் விதமாக துடிப்புடன் இருக்கும் பணியாகும். அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் போலீசார், செல்போன் பயன்படுத்துவதன் மூலம் கவனச்சிதறல் ஏற்படுகின்றன. எனவே, செல்போன் பயன்பாட்டினால், ஏற்படும் கெட்ட பின்விளைவுகளை உயர் அதிகாரிகள் எடுத்துக் கூறவேண்டும். பணியில் இருக்கும் போலீசார் செல்போன்களை தேவையில்லாமல் பயன்படுத்தக் கூடாது.

எனவே, சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழ் பணியாற்றுபவர்கள், பணியின்போது செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி என்பது முக்கியமான பணி என்பதால், போக்குவரத்து போலீசார் பணியின்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை நீதிபதி படித்து பார்த்தார். பின்னர் அரசு குற்றவியல் வக்கீல், ‘இந்த சுற்றறிக்கை வெளியிட்ட பின்னரும் செல்போனை பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 13 போலீசார் மீதும், திருவாரூர் மாவட்டத்தில் 9 போலீசார் மீதும், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் தலா 3 பேர் என்று 6 போலீசார் மீதும், திண்டுக்கலில் 2 பேர் மீதும், கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் தலா ஒரு போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதையடுத்து நீதிபதி, ‘ஐகோர்ட்டு கருத்து தெரிவித்ததும், டி.ஜி.பி.யும், சென்னை போலீஸ் கமி‌ஷனரும் நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது. பொது மக்களின் நலனுக்காகத் தான் இந்த கருத்து நான் தெரிவித்தேன். எனவே, போக்குவரத்து போலீசார் பணியின்போது, உயிர் சேதம் ஏற்படாத வண்ணம், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவேண்டும்’ என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button