தமிழகம்

வீட்டிற்குள் இருந்து கொரோனாவை நாட்டை விட்டு விரட்டிடுவோம்

பிரதமர் மோடியின் உத்தரவை அடுத்து தமிழக அரசும் 21 நாட்கள் தொடர்ந்து 144 தடை உத்தரவை மதித்து பின்பற்றி வருகிறது. இந்த 144 தடை உத்தரவை மதித்து பொதுமக்கள் அத்தியாவதியத் தேவைக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம்.

மற்ற நேரங்களில் பொதுமக்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது. அதேபோல் குழந்தைகளையும், பெரியவர்களையும் பாதுகாக்க வேண்டும்.

சுகாதாரத்துறை,வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக இந்த நோயின்தாக்கத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார்கள். அதற்குமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த நோயிலிருந்தும் நம்மைகாக்க வேண்டும் என்று சொன்னால் தனிமைப்படுத்த வேண்டும். அதனால் மக்கள் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும். இந்த நோய் பரவாமல்தடுப்பதற்காக கிருமி நாசினியை எல்லாப்பகுதிகளிலும் தெளித்து வருகிறார்கள்.

மக்களின்ன நடமாட்டத்தை குறைத்து நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் அதேவேளையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிமாநிலங்களைச்சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிட வசதி,உணவு, மருத்துவ வசதிகள் அனைத்தும் அவர்கள்பணிபுரிந்த நிறுவனங்களே செய்து தரவேண்டும். இதனைஅந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் மாத இறுதியில் சம்பளம்வழங்குவதை உறுதி செய்ய பள்ளி,கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்ஊழியர்களின் சம்பள பட்டியலை தயார்செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இரண்டு அல்லது மூன்றுஊழியர்களுக்கு மட்டும் மூன்று நாட்களுக்குமாவட்ட ஆட்சியர்கள், பெருநகரங்களில் மாநகராட்சி ஆணையர்கள் அனுமதி வழங்க வேண்டும்.வருகிற இரண்டு மாதங்களில் பிரசவிக்கதயாராக 1.5 லட்சம் தாய்மார்களின் உடல்நிலைகுறித்து தனிகவனம் செலுத்துமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் 17,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் 4000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 46,000க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்றார்.

ஊரடங்கு உத்தரவு அறிவித்த நாள் முதல் அரசின் உத்தரவை மதித்து பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க வெளியில் வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க துணை ராணுவம் வரவழைக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாயப் பொருட்கள் பெருமளவில் வீணாகி சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை விற்க முடியாமல் அழுகிப் போவதால் விவசாயிகள் இழப்பை சந்தித்துள்ளனர். அது தவிர விவசாயப் பணிகளை செய்தால் தான் அரிசி, காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை விளைவித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும் என்ற நிலை இருக்கிறது.

அதனால் ஊரடங்கு உத்தரவில் இருந்து அத்தியாவசியப் பணியான விவசாயத்திற்கு விலக்கு அளிக்க வேண்டி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததையடுத்து விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், உர விற்பனை நிலையங்கள், விவசாயம் விவசாய கூலிப்பணிகள், விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களை இயக்குவதற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது தமிழக அரசு.

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மத்திய, மாநில அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளார். கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகளுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய 400 கோடியை வழங்க வேண்டும். ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ஓரணியில் நின்று இந்த பேரிடரை எதிர்த்து போராட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். ஆகவே மாநிலங்கள் கேட்கும் நிதியை வழங்குவதில் மத்திய அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூன்று மாத காலத்திற்கு கடன் தவணைகள், அசல்களை வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. இதனை தமிழக அரசின் சார்பில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும், கூட்டுறவு கடன்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்துவரி, சாலை வரி உள்ளிட்டவற்றையும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். விவசாயிகளின் பாதிப்பை போக்கிடும் வகையில் தொகுப்பு நிவாரண அறிவிப்பு ஒன்றை முதல்வர் பழனிச்சாமி உடனடியாக வெளியிட வேண்டும்.

கொரோனா தடுப்பின் ஆர்வத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் காவல்துறையில் உள்ள சிலர் வெளியே வருவோரின் வாகனங்களை அடித்து நொறுக்குவதும், தடியடித் தாக்குதல் நடத்துவதும், வாகனங்களின் காற்றை பிடுங்கி விட்டு பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக் கொள்ள  நேரக்கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. சமைத்த உணவுகளை வினியோகம் செய்ய ஸ்விகி, சொமோட்டோ, ஊபர் ஈட்ஸ் ஆகிய உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களில் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை உணவுகள் மற்றும் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை மதிய உணவும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவு டெலிவரி செய்ய அரசு அனுமதி அறிவித்துள்ளது. அதேபோல் கோயம்பேடு காய்கறி மற்றும் பழச்சந்தையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் காய்கறிகளை இறக்கிவிட வேண்டும். மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 2.30 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். ஆதரவற்றோருக்கு சமைத்த உணவை வழங்க விரும்பும் நபர்கள் நேரடியாக வழங்கக் கூடாது. மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் மூலமாகத்தான் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக டாஸ்மாக் மதுபான கடைகளின் பார்கள் உள்ளிட்ட அனைத்து பார்களும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஏப்-14 வரை ஊரடங்கு உத்தரவை மோடி பிறப்பித்தார். அந்தவகையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பார்கள் உள்ளிட்ட அனைத்து பார்களும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் பொதுமக்களும் அரசிற்கு ஒத்துழைத்து 144 தடை உத்தரவை மதித்து ஒவ்வொருவரும் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்தால் மட்டுமே கொரோனா சமூகத் தொற்றாக பரவாமல் தடுக்க முடியும். சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து சேவை செய்து வருவதை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நமக்காக பணியாற்றுபவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருந்து கொரோனாவை நாட்டை விட்டு விரட்டிடுவோம் என்று சபதமேற்று செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்

சூரியன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button