இந்தியாதமிழகம்

கொரோனாவும் குடிகாரர்களும்…

கேரளம் மற்றும் ஈரோட்டில் டாஸ்மாக்கில் முண்டியடிக்கும் குடிமகன்களால் கொரோனா பரவலை தடுக்க கோடு போட்டு மது வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டது.

இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன், கொரோனா நீயும் வரக்கூடாது … என்று டீல் போட்டு குடிமகன்கள், பால்வாடி பாப்பாக்கள் போல…, குணமா…, வரிசை கட்டி நிற்கின்றனர்.

அதே நேரத்தில் தலை நகர் சென்னையில் குடிப்பதற்கு மனமிருந்தால் கொரோனாவை மறந்து விடலாம் என்று முண்டியடிக்கும் அலட்சியமான நிலைதான் இருந்தது.

இன்னும் சில மதுக்கடைகளில் பார்கள் மூடப்பட்டு விட்டதால், திறந்த வெளி புல் வெளிகழகத்தில் அமர்ந்து போதையேற்றி, அங்கேயே மட்டையாகி கிடந்தனர் சில குடிமகன்கள்..!

அதுவும் குடிகாரர்களின் கொண்டாட்ட தினமான ஞாயிற்றுக் கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் திருவல்லிக்கேணி பகுதி மதுக்கடைகளில் மதுவாங்க இப்போதே கூட்டம் முண்டியடிக்க தொடங்கி விட்டது. குடிமகன்களால் நோய்பரவலை தடுக்க அப்போதே வேப்பிலை மாவிலை தோரணம் கட்ட தொடங்கிவிட்டார்.

அரசின் நிதிக்கு ஆதாரமாக இருக்கும் இத்தகைய குடிமகன்கள் தான் கொரோனாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர்கள் போல ஊர் முழுவதும் பரப்பிவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விபரீதம் கருதி சென்னையிலும் கோடு போட்டு குடிமகன்களுக்கு குட் டச், பேட் டச்சோடு, இனி டோண்ட் டச் என்றும் பாடம் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நாடே கொரோனாவுக்காக முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது.

நாடே கொரோனாவுக்காக முடக்கப்படிருக்கும் நிலையில் தமிழகத்தில் கள்ளச் சந்தையில் மதுவிற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளது.தஞ்சைமாவட்டம்,பேராவூரணி தாலுகாவிற்குட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் முன்னாள் கவுன்சிலர் ராஜகுமாரி பழனியப்பனின் வீடே மதுக்கடையாக செயல்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்..!

சட்டவிரோதமாக மதுவிற்பனை கன ஜோராக நடந்து வரும் நிலையில் எத்தனை பாட்டில்கள் வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்கிறனர். ஒரு பாட்டிலுக்கு 50 ரூபாய் அதிகம் விலை வைத்து களை கட்டிவருகின்றது இந்த கள்ளமதுவிற்பனை

கொரோனா குறித்த எந்த ஒரு விழிப்புணர்வு இல்லாமல் இந்த வீட்டிற்கு வந்து குடிமகன்கள் பாட்டில்களை வாங்கிச்செல்கின்றனர். தடுக்க வேண்டியவர்களுக்கு கமிஷன் சென்று விடுவதால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகின்றது.

அதே போல 21 நாட்கள் பார்கள் மூடப்பட்டு விட்டதால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அமதுண்ணாகுடி மதுக்கடை பார் உரிமையாளர்கள் தங்கள் வருமானத்திற்காக சட்டவிரோதமாக கருவேலங்காட்டிற்குள் கூலிக்கு ஆள்வைத்து மதுவிற்பனையை நடத்தி வந்தனர்

ஊருக்குள் மதுவாங்க வரும் வெளியூர் நபர்களால் கொரோனா நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறி உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மதுவிற்றவர்களையும் எச்சரித்து விரட்டினர்.மதுவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் வாய்மூடி மவுனியாக இருந்தாலும் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களே தற்போது நேரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது குறிப்பிடதக்கது.

செந்தில்குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button