ஒரே கடிதத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிய டிஜிபி ஜாபர்சேட்…!
மதுரையில் ஜவுளி கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போராட்டத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்காக நிதி திரட்டி கொடுத்த டிஜிபி.
மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். காற்றின் வேகத்தில் தீ அதிகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சக்திராஜா ஆகிய 2 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மற்றும் சில வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் இருவர் மரணமடைந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார் டிஜிபி ஜாபர்சேட். அத்தோடு நின்றுவிடாமல் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்ந்த அலுவலர்கள் அனைவருக்கும் உருக்கமான மெசேஜ் ஒன்றையும் வாட்ஸ்அப் மூலம் அவர் பதிவு செய்துள்ளார்.
கடிதத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் நிலைகண்டு கனத்த இதயத்தோடு இருப்பதாகவும் அவர்களது குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவியை அரசு கொடுத்துள்ளது. அதைத்தாண்டி நம் அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.அதற்காக தனது சார்பில் 25 ஆயிரம் ரூபாய் அளிப்பதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து தமிழகம் முழுக்க உள்ள தீயணைப்பு நிலையங்களில் உள்ள அதிகாரிகள் வீரர்கள் அனைவரும் நிவாரண நிதியை கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்துள்ளனர். முடிவில் ஒரு கோடியே 2லட்சம் ரூபாய் நிதி வசூலாகி இருக்கிறது. இந்த தொகையை தீ விபத்தில் உயிரிழந்த வீரர்கள் இருவரது குடும்பத்தினரையும் நேரில் அழைத்து தலா 51 லட்சம் ரூபாய் வீதம் காசோலையாக டிஜிபி ஜாபர்சேட் வழங்கினார்.
இதுவரையில் தீயணைப்பு துறை வீரர்கள் விபத்தில் உயிரிழந்தால் அவர்களுக்கு அரசின் நிவாரணம் தவிர துறை சார்பில் இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டதில்லை. டிஜிபி ஜாபர்சேட் வேண்டுகோளை ஏற்று இந்த தொகை வசூலாகி இருக்கிறது.அவரது முயற்சிக்கு அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020, டிசம்பர் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெற்ற டிஜிபி ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்த தொகையை வழங்கி விட்டு சென்றுள்ளார்.