இஸ்லாமுக்கு எதிராக சர்வதேச அரசியல் பேசும் மொய்தீன் பாய் ! “லால் சலாம்” திரைவிமர்சனம்
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த், நிரோஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் ” லால் சலாம்”.
கதைப்படி… இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் கிராமத்திலிருந்து மும்பை சென்று தொழிலதிபராக வசித்து வருகிறார் மொய்தீன் பாய் ( ரஜினி ). இவரது மகன் சம்சுதீன் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட தேர்வு செய்யப்படுகிறார். கிராமத்தில் சந்தனக் கூடு திருவிழாவிற்கு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டியில் ரஜினியின் நண்பர் ( லிவிங்ஸ்டன் ) மகன் திருநாவுக்கரசு ஒரு அணியின் கேப்டனாக களம் காண்கிறார். சம்சுதீன், திருநாவுக்கரசு அணிகளுக்கிடையே கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற போட்டிகளில் திருவின் அணியே தொடர்ந்து வெற்றியைக் குவித்த நிலையில், இந்தப் போட்டியில் சம்சுதீன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீர்க்கமாக இருந்து வருகிறார். போட்டியின் முடிவில் இரு அணிகளுக்கிடையே கலவரம் ஏற்பட்டு மதக்கலவரமாக மாறுகிறது. பின்னர் ஊரே இரண்டாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் பழிவாங்கும் எண்ணத்தில் மோதிக் கொள்கிறார்கள். இதில் இரண்டு பிரிவினரும் திருவை வெறுத்து ஒதுக்குகிறார்கள்.
இந்நிலையில் கோவில் தேர் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், அரசியல் வாலியின் சதியால் தேர் திருவிழாவும் நடைபெறாமல் தடைபடுகிறது. இதற்கும் திருநாவுக்கரசு தான் காரணம் என ஊர்மக்கள் அவரது தாயை பொதுமக்கள் மத்தியில் அவமானப் படுத்துகிறார்கள். தன்னால் தடைபட்ட தேர் திருவிழாவை எப்படியாவது நடத்தி ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார் திருநாவுக்கரசு. இவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா ? பிரிந்து கிடக்கும் இந்து, இஸ்லாமிய சமூகத்தினரியே ஒற்றுமையை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை நிலைநாட்டினாரா முகைதீன் பாய் ? என்பது மீதிக்கதை…
கிராமங்களில் கோவில் திருவிழாக்களின் போது உறவுகளின் சங்கத்தால் ஏற்படும் சந்தோஷத்தை உணரும் தருணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை செந்திலின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒற்றுமையாக இருக்கும் ஊரில் அரசியல் நுழைந்ததால் ஏற்படும் விளைவுகளையும் நான்றாகவே காட்சிப்படுத்தியுள்ளார். ரஜினி சிறப்புத் தோற்றம் என்றாலும் முழுக்கதையையும் தாங்கி நிற்கிறார். அவரைச்சுற்றியே கதை நகர்கிறது. போகிற போக்கில் சர்வதேச பிரச்சினைகளை ஏற்படுத்தும் வசனங்கள் நிறைய இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இரு சமூகத்தினரும் சமாதானம் பேசும் காட்சியில் முஸ்லீம்களை எல்லாம் அப்பவே நாட்டைவிட்டு விரட்டியிருக்க வேண்டும் என தர்மராஜ் ராஜினியைப் பார்த்து பேசும் வசனம் குறிப்பிடத்தக்கது. ஒற்றுமையாக இருக்கும் தமிழகத்தில் இதுபோன்ற வசனங்கள் தேவைதானா ? இயக்குநர் தவிர்த்திருக்கலாம்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லாமல் இழுத்திருக்கிறார் இயக்குநர்.