சித்த வைத்தியரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தினர் ! “வெள்ளிமலை” திரைப்படத்தின் விமர்சனம்
சூப்பர் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரிப்பில், சூப்பர் குட் சுப்பிரமணி, அன்சு கிருஷ்ணா நடிப்பில், ஓம் விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “வெள்ளிமலை”
கதைப்படி… வெள்ளிமலை அடிவாரத்தில் கீழ் வெள்ளிமலை என்கிற மலைக்கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். அங்கு சித்த வைத்தியர் சூப்பர் குட் சுப்பிரமணி தனது மகள் ( அன்சு கிருஷ்ணா ) மணோன்மணி-யிடன் வசித்து வருகிறார். அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏதாவது நோய் நொடி ஏற்பட்டால் சில மைல் தூரமுள்ள மருத்துவமனைக்குச் சென்றுதான் மருத்துவம் பார்ப்பார்களே தவிர உள்ளூரில் உள்ள வைத்தியரிடம் யாரும் மருந்து வாங்கி சாப்பிடுவதில்லை. ( இதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் கதையும் சொல்லப்படுகிறது. )
சின்னச் சின்ன வியாதிகளுக்கு கூட யாரும் மருந்து கேட்டு வராததால் மனவேதனை அடைந்த வைத்தியர், என்னை உதாசீனப்படுத்தும் இந்த ஊர் மக்கள், ஒரு நாள் எனது அருமையை உணர்ந்து என்னைத்தேடிவரும் காலம்வரும் என்கிற நம்பிக்கையோடு தனது வழக்கமான பணிகளைச் செய்து வருகிறார். வைத்தியரை ஊர் மக்கள் உதாசீனப்படுத்தும் போதெல்லாம் அவரது மகள் மணோன்மணி அவருக்கு ஆறுதல் கூறி பக்கபலமாக இருக்கிறார்.
இந்நிலையில் வைத்தியரின் நண்பர் மொரட்டு ஆள் என்பவர் இறப்பிற்கு அவரது பேரன் புயல்ராசு சென்னையிலிருந்து நோய்த்தொற்றுடன் வருகிறார். இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் வைத்தியர் தயாரித்த கண்டங்கத்திரி மூலிகை கசாயம் வழங்கப்படுகிறது. பின்னர் தொற்று பரவி அனைவரும் சொறிந்து கொண்டே அலைகின்றனர். வைத்தியர் கொடுத்த மூலிகை கசாயத்தால்தான் அறிப்பு நோய் ஏற்பட்டதாக அனைவரும் வைத்தியரை தாக்க முற்படுக்கின்றனர். பின்னர் புயல்ராசு உண்மையை விளக்கி தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோருகிறார்.
கிராம மக்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு தீர்வு கிடைத்ததா ? உள்ளூர் சித்த வைத்தியரின் அருமையை அந்த ஊர்மக்கள் உணர்தார்களா ? இல்லையா ? என்பது மீதிக்கதை….
சித்த வைத்தியராக சூப்பர் குட் சுப்பிரமணி தனது கதாப்பத்திரத்தை உணர்ந்து ஒரு மலைக்கிராம சித்த வைத்தியராகவே வாழ்ந்திருக்கிறார். தாய் இல்லாமல் ஒரு பெண்ணை வளர்த்து, அவரை கரைசேர்க்க அவளுக்காக ஏதும் சேர்த்து வைக்கவில்லையே என எங்கும் போது அனைவரையும் கண் களங்க வைக்கிறார். சூப்பர் குட் சுப்பிரமணிக்கு”வெள்ளிமலை” திரைப்படம் ஒரு மணிமகுடம் என்றே சொல்லலாம்.
அதேபோல் வைத்தியரின் மகளாக நடித்துள்ள அன்சு கிருஷ்ணா நடை, உடை, பாவனையில் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். தந்தையின் மனங்கோனாமல் அவரது லட்சியம் நிறைவேற, தந்தைக்காகவே வாழும் மகளாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு இடையே இருக்கும் கிராமங்களையும், அந்த மக்களின் வாழ்க்கை முறையையும், அற்புதமாக திரைக்கதை அமைத்ததோடு, அதற்கேற்ற வசனங்கள் மூலம் நமது முன்னோர்கள் கண்டறிந்த சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்திய இயக்குனர் ஓம் விஜய்க்கு வாழ்த்துக்கள்.
இயக்குனரின் எண்ணங்களை நமது கண்முனே நிறுத்திய ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பு. பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் தனது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.