காரை நிறுத்த இடைஞ்சல் ! அரசு ஊழியரை கொலை செய்யத் துணிந்த ஐ.டி ஊழியர் ! “பார்க்கிங்” படத்தின் திரைவிமர்சனம்
ஃபேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிப்பில், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஸ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ரமா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பார்க்கிங்”.
கதைப்படி… சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஈஸ்வர் ( ஹரிஸ் கல்யாண் ) ஆதிகாவை ( இந்துஜா ) காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டிற்கு குடிபோகிறார். அங்கு அரசு ஊழியரான இளம்பரிதி ( எம்.எஸ். பாஸ்கர் ) ஏற்கனவே வாடகைக்கு இருக்கிறார். சில நாட்கள் இரண்டு குடும்பங்களும் நன்றாக பழகுகிறார்கள். பின்னர் ஈஸ்வர் ஒரு கார் வாங்குகிறார். அந்த வீட்டில் ஒரு கார் நிறுத்துவதற்கு மட்டுமே இடம் இருக்கிறது. அதில் இளம்பரிதி தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கிறார். அந்த பைக்கை ஓரமாக வைத்துவிட்டு காரை நிறுத்துகிறார் ஈஸ்வர்.
காலையில் இளம்பரிதி எழுந்து பார்க்கும்போது பைக்கை எடுக்க முடியாத அளவுக்கு கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. அலுவலகத்திற்கு செல்ல நேரமாகியும், ஈஸ்வர் காரை எடுக்காததால் ஆட்டோவில் கிளம்பிச் செல்கிறார். அதன்பிறகு இளம்பரிதியும் ஒரு கார் வாங்குகிறார். இருவரும் தங்களது வண்டியை நிறுத்துவதற்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தினசரி சண்டை போடுகின்றனர். இவர்களது சண்டையை சமாதானப்படுத்த ஈஸ்வரின் கர்ப்பிணி மனைவி ஆதிகா எவ்வளோ முயற்சி செய்தும் பலனலிக்காததால், வீட்டை மாற்றி விடலாம் எனக்கூறியும், தனது ஈகோவால் நாம் ஏன் வேறு வீட்டிற்குச் செல்ல வேண்டும் ? இங்கேதான் இருப்பேன் என அடம்பிடிக்கிறான். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…
படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவர்கள் வசிக்கும் தெருக்களில், தினசரி சந்தித்த, பார்த்த விஷயங்களை திரையில் பார்ப்பதாக உணர்ந்து ரசிக்கும் விதமாக காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர். வெகுஜன மக்களின் எண்ண ஓட்டங்களை உள்வாங்கி அற்புதமாக திரைக்கதையை அமைத்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
அதேபோல் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் ஹரிஸ் கல்யாணும், எம்.எஸ். பாஸ்கரும், மேலும் நாயகி இந்துஜா கர்பிணியாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக ரமா, அவரது மகள் என படத்தில் நடித்துள்ள அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.