“சூரகன்” படத்தின் திரைவிமர்சனம்
3 rd ஐ கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சதீஷ் கீதாகுமார் இயக்கத்தில், கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், ரேஷ்மா, வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், வினோதினி வைத்யநாதன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சூரகன்”.
கதைப்படி… ஒரு கும்பல் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்செல்லும்போது , அவர்களை விரட்டிப்பிடித்து தாக்குதல் நடத்துகிறார் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன். அப்போது அவரும் தாக்குதலுக்கு ஆளாகி, மயக்க நிலையில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுகிறார். இந்த சமயத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கார்த்தி கேயனுக்கு பார்வை கோளாறு இருந்த காரணத்தால், துப்பாக்கி சூட்டில் அப்பாவிப் பெண் இறந்து விட்டதாகக் கூறி தற்காலிக பணியிடை நீக்கம் செய்கின்றனர்.
பின்னர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பலத்த காயங்களுடன் ஒரு பெண் சாலையில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடக்கிறார். அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். ஆனால் அந்தப் பெண் இறந்து விடுகிறார். அவரது செல்போன் இவரிடம் இருக்கிறது. அப்போது ஒருவர் இவருக்கு மிரட்டல் விடுக்கிறார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும் சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து, அமைதியாக இருக்காமல், தடுத்து நிறுத்த முற்படுகிறார் கார்த்திகேயன். ஆனால் இவரது செயலுக்கு முட்டுக்கட்டை போடுவது போல் அதிகாரிகள் இவரைத் தடுக்க நினைக்கிறார்கள். காவல்துறை உயரதிகாரிகளின் தவறுதலான முடிவால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கார்த்திகேயன், சமூகத்தில் நடைபெறும் அநியாயங்களை தடுத்து நிறுத்தி, எவ்வாறு பணியில் சேருகிறார் என்பது மீதிக்கதை…
கதாநாயகனுக்கு முதல் படம் என்றாலும் ஓரளவு முயற்சி செய்திருக்கிறார். நடப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல் இயக்குனரும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். படத்தில் பிரபலங்கள் நிறையபேர் நடித்திருந்தாலும், சரியான விதத்தில் அவர்களை பயண்படுத்தியிருக்கலாம்.