பிராமண பெண் “சிறந்த செஃப்” ஆக முடியுமா ? “அன்னபூரணி” திரைவிமர்சனம்
ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அன்னபூரணி”.
கதைப்படி… ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோவிலில், மூன்று தலைமுறைகளாக சாமிக்கு பிரசாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அன்னபூரணி ( நயன்தாரா ). இளம் வயதிலிருந்தே சமயலில் ஆர்வம் கொண்ட அன்னபூரணிக்கு இந்தியாவிலேயே சிறந்த ( செப் ) சமையல் கலைஞராக வரவேண்டும் என்பது லட்சியம். சிறு வயதிலிருந்தே மகள் கேட்டதெல்லாம் தட்டாமல் செய்து கொடுத்த தந்தை, மகள் பெரியவள் ஆனதும், இவர் பிராமணர் குடும்பத்தில் பிறந்ததால் அசைவ உணவுகளை சமைக்க வேண்டும், அதனை ருசி பார்க்க வேண்டும் என்பதால் அவருடைய தந்தை அன்னபூரணியை ( சமையல் படிப்பு ) கேட்டரிங் படிக்க வேண்டாம் என்கிறார்.
ஆனால் நண்பர் பர்ஹானின் ( ஜெய் ) உதவியால், வீட்டில் எம்பிஏ படிப்பதாக கூறி கேட்டரிங் படிப்பில் சேருகிறார். இது ஒருநாள் அவரது தந்தைக்கு தெரியவர மகளின் படிப்பை நிறுத்தி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அன்னபூரணியின் நீண்டகால கனவை நிறைவேற்ற நண்பர் பர்ஹான் அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
பிராமண குடும்பத்தில் பிறந்த அன்னபூரனி இந்தியாவின் சிறந்த செப் ஆனாரா ? இல்லையா ?, அவரது குடும்பம் என்னானது என்பது மீதிக்கதை…
பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் மட்டுமே சமயற்கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில், அதையே திரைப்படமாக எடுத்து, பெண்கள் நினைத்தால் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கலாம் என்கிற எண்ணத்தை விதைத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள்.
லாஜிக் மீறல்கள் நிறைய இருந்தாலும், நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.