தமிழகம்

செல்போன் மற்றும் கணினியில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

ஊரடங்கால் வீட்டில் முடங்கிகிடப்போர் செல்போன் மற்றும் கணினியின் டிஜிட்டல் திரையில் மூழ்கிகிடந்தால் விரைவாக பார்வைகுறைபாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் 50 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருக்கும் ஊரடங்கால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஓய்வில்லாமல் டிவி, செல்போன், லேப்டாப், மற்றும் கணினியில் மூழ்கி கிடக்கின்றனர். டி.வி யை தொலைவில் இருந்து பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு குறைவு என்றாலும், ஒட்டிபிறந்த இரட்டை குழந்தை போல நாளெல்லம் கையில் செல்போன்களுடன் இணைபிரியாமல் இருப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. வீட்டில் இருந்தே பணிபுரிவோர் லேப்டாப்களை உற்று நோக்கி வருகின்றனர். இன்னும் சிலர் ஆன்லைனில் பாடங்களை கற்க கணினி முன் நேரத்தை செலவிடுகின்றனர்.இவை எல்லாவற்றிலும் உள்ள டிஜிட்டல் திரையால் நமது கண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்கட்டுகின்றனர் கண் மருத்துவர்கள்.

தொடர்ந்து நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை உற்று நோக்கும் போது கண்ணின் கருவிழிகள் பாதிக்கப்பட்டு குழந்தைகள் கூட கிட்டபார்வை எனும் பார்வை குறைபாட்டால் நீண்ட காலத்திற்கு பாதிக்கும் நிலை உருவாகும் என்று எச்சரிக்கின்றனர். இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்க செல்போன், கணினி போன்றவற்றின் டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது அடிக்கடி கண்களை சிமிட்டுவதை பழக்கமாக்கி கொள்வது அவசியமாகிறது. அப்படி செய்தால் கருவிழிக்கு ஈரப்பதம் கிடைக்கும் என்றும் டிஜிட்டல் திரையில் இருந்து வெளியாகும் நீலஒளியினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறையும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் கணினி உபயோகத்தை தவிர்க்க இயலாதவர்கள், மருத்துவர் அறிவுரைப்படி கண்ணுக்கு அவ்வபோது சொட்டு மருந்து இட்டுக் கொள்ளலாம் என்றும் ஆன்ட்டி ரிஃப்லக்டர் கண்கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்கூடுமானவரை வீட்டில் இருக்கும் குழந்தைகள் டிஜிட்டல் திரை கொண்ட செல்போன்கள், லேப்டாப்புகளில் வீடியோ கேம் விளையடுவதை தவிர்த்து, வீட்டில் அமர்ந்து ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல், ஜெஸ், கேரம் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

விலைமதிப்பற்ற கண்களில் பார்வை குறைபாடு ஏற்பட்டால் அது வாழ்க்கை முழுவதற்கும் எக்ஸ்ட்ரா லக்கேஜாக நம்மை கண்ணாடி அணியவைத்து விடும் என்பதை உணர்ந்தாவது டிஜிட்டல் திரைகளை தள்ளிவைத்து, கண்களை பாதுகாப்போம்..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button