தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது விழா வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை, காலா உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சென்னையில் கத்தியுடன் சாலையில் சண்டையிட்ட இரு மாணவர்களின் கைகள் முறிந்து போனதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட திரைப்படங்களும் அதில் வருகின்ற ஹீரோக்களுமே காரணம் என்று குற்றஞ்சாட்டினார் இயக்குனர் லெனின் பாரதி, அத்தகைய ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் கைகளை என்ன செய்யபோகின்றோம் ?என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் கல்லூரிக்கு கல்வி கற்க போகின்றோம் என்பதை மறந்து யார் பெரியவர்? என்று கத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது, பேருந்தை சிறைப்பிடிப்பது, பெண் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பது, பேருந்து மீது ஏறி நின்று குதிப்பது என்று ரவுடிகள் செய்யும் அத்தனை காரியங்களையும் செய்யும் இவர்களை மாணவர்களாக எப்படி கருதுவது?
படிக்கின்ற வயதில் படிப்பை மறந்து தங்களை சினிமாவில் வரும் கதாநாயகனை போல பாவித்து கையில் கத்தியுடன் சண்டையிட்ட இந்த இருவரும் சென்னை பெரு நகர காவல்துறையினரால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
கழிவறையில் வழுக்கி விழுந்து இருவருக்குமே கை முறிந்து போனதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், மாணவர்கள் கையில் கத்தி எடுப்பதற்கு காரணமாக சினிமா காட்சியில் நடித்த ஹீரோக்கள் மற்றும் அதனை காட்சி படுத்திய இயக்குனர் ஆகியோரின் கைகளை என்ன செய்வது ? என்று மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.
இயக்குனர் லெனின் பாரதியின் இந்த பேச்சுக்கு திரை உலகில் ஒருவித எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இயக்குனர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.
திரை வன்முறைதான் நிஜ வன்முறையாகின்றது என்பதை ஒப்புக் கொள்ளும் இயக்குனர் பாரதிராஜவே தனது தாஜ்மகால் படத்தில் ஹீரோ கையில் அரிவாளை தூக்கிக் கொடுத்ததோடு அனைவரையும் அரிவாளை எடுத்து வருமாறு அறைகூவல் விடுத்து பாடல் காட்சியே வைத்து உள்ளார்.
மேடையில் பேசும் போது சமூக சீர்த்திருத்த வாதிகளை போல பேசிவிட்டு திரையில் கதைக்கு தேவைப்படுவதால் ஹீரோவிடம் அரிவாளை கொடுத்தோம், ஹீரோயின் ஆடையை குறைத்தோம் என்று விளக்கம் சொல்வதே இந்த தமிழ் சினிமா இயக்குனர்களின் வேலையாகி போய்விட்டது என்று குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், சினிமா நாயகனை சக்தி மிக்கவனாக காட்டுவதற்கு திரை இயக்குனர்கள் செய்கின்ற கிராபிக்ஸ் சண்டை காட்சிகள் மாணவர்களின் மூளைக்குள் புகுந்து அவர்களையும் வன்முறையாளனாக மாற்றிவிடுகின்றது என்பதே கசப்பான உண்மை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
- நமது நிருபர்