கோவையில் பேருந்தில் சிகிச்சை அளித்ததால் இறந்து போன கொரோனா நோயாளி..
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளுக்குச் சொந்தமான பேருந்துகளை அரசு மருத்துவமனையின் நுழைவாயிலில் நிறுத்தி ,பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்தி செவிலியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்தி தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், சமீபத்தில் பேருந்துகளில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் இறந்துவிட்டார். பேருந்தில் இறந்து போன நோயாளி பற்றிய செய்தி யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
இக்கட்டான சூழ்நிலையில் பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்தி நோயாளிகளை காப்பாற்றும் நோக்கத்துடன் செவிலியர்கள் சிகிச்சை அளிப்பது சற்று ஆறுதலைத் தந்தாலும், நோயாளிகள் இறப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை நகரில் உள்ள பள்ளி கல்லூகள், மாநகராட்சி பகுதிகளில் உள்ள சமூக நலக்கூடங்கள் , தனியார் திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.