சீனாவை மையமாக கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொள்ளை நோயால் சர்வதேச அளவில் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. எனினும், இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதில் உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சீனா, அமெரிக்கா இடையே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கான தடுப்பூசியை சீனா கண்டுபிடித்ததும் அதை உலகின் பொது சொத்தாக்குவோம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் முதன்முறையாக மனிதர்கள் மீது சோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சாதகமான முடிவை தந்துள்ளதாக அந்நாட்டின் பயோடெக் நிறுவனமான மாடர்னா இன்க் தெரிவித்துள்ளது. உடல்நலம் மிக்க தன்னார்வலர்களுக்கு, பரிசோதனை தடுப்பு மருந்தை கொடுத்து சோத்தித்து பார்த்ததில் அவர்களது உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவானது தெரியவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த சோதனையில் பங்கேற்ற 8 பேரிடம் இருந்து இந்த தரவுகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கும் மாடர்னா நிறுவனம், தான் கண்டுபிடித்துள்ள கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அந்த மருந்து உருவாக்குகிறது என ஆய்வு முடிவுகள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.
100 மைக்ரோகிராம் டோஸை பெற்றவர்கள் மற்றும் 25 மைக்ரோகிராம் டோஸைப் பெற்றவர்கள் என சோதனையில் பங்கேற்ற 8 பேரிடம் செய்த பகுப்பாய்வில், கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஆன்டிபாடிகளின் அளவைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது கொரோனா வைரஸில் இருந்து மீண்ட நபர்களின் மக்களின் ரத்தத்தில் காணப்பட்டதை விட அதிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 100 மைக்ரோகிராம் டோஸை பெற்றவர்கள் உடலில், 25 மைக்ரோகிராம் டோஸைப் பெற்றவர்களின் உடலில் இருப்பதை விட அதிகமான ஆன்டிபாடிகள் இருப்பதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், அடுத்தகட்ட சோதனைகளுக்கு பிறகே இந்த மருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதற்கான இரண்டாம் கட்ட சோதனை விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும், அடுத்தகட்ட சோதனைகளுக்கு பிறகே இந்த மருந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதற்கான இரண்டாம் கட்ட சோதனை விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மூன்றாம் அல்லது இறுதி கட்ட பரிசோதனை முயற்சியை மிகப்பெரிய அளவில் ஜூலை மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாடர்னா தெரிவித்துள்ளது.இதனிடையே, மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிக்கு மனிதர்களிடம் சோதிக்கும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கிடைத்துள்ளது. முன்னதாக, ஒழுங்குமுறை மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்காக அமெரிக்க சுகாதார நிறுவனத்தின் “ஃபாஸ்ட் டிராக்” மதிப்பை இந்த நிறுவனம் கடந்த வாரம் வென்றது என்பது கவனிக்கத்தக்கது.
மருந்து தயாரிப்பினை அதிகப்படுத்த நாங்கள் அதிகளவில் முதலீடு செய்கிறோம். இதன் மூலம், கோவிட்-19இல் இருந்து எங்களால் முடிந்தவரை மக்களைப் பாதுகாக்க உதவும் பொருட்டு நாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய மருந்துகளின் அளவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டிபானே பான்செல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்த செய்தி வெளியானவுடன், அமெரிக்க பங்கு சந்தையில் மாடர்னா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. முன்னதாக, தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான பணத்தை திரட்டுவதற்காக, தனது பொதுப்பங்குகளில் இருந்து 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், 1.34 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை சலுகை விலையில் பங்கு ஒன்றினை 76 அமெரிக்க டாலருக்கு என விற்பனைய அந்நிறுவனம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு ஆர்செனிகம் ஆல்பம்-30 (Arsenicam Album-30) என்ற ஹோஹாமியோபதி மருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உலகை மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதில் உலக மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேசமயம், மலேரியாவை குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிசோதனை அடிப்படையில் மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.
அதேபோல், பிளாஸ்மா சிகிச்சை, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரைகள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனிடையே, கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற மருந்தை சாப்பிட மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒரு பரிந்துரையை வைத்தது. அதன்படி, அந்த மருந்தை தொடர்ந்து 3 நாட்களுக்கு வெறும் வயிறில் சாப்பிட வேண்டும். ஒரு மாதத்திற்கு பின்னர் இதே முறையில் மீண்டும் மருந்து சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேரளா, பஞ்சாப், தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்று பின்பற்றி வருவதாகவும், தமிழகமும் இந்த முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்செனிகம் ஆல்பம்-30 ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தது. அதனை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அமல்படுத்தி வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்று வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
– வேல்மணி