திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நியமிக்கப்படுவது எப்போது..?
திண்டுக்கல் மாவட்டத்தில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப்பெற தினசரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வருகைதரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டு அவர்களது குறைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் மிகப்பெரிய கடமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை மதுரைக்கு இட மாற்றம் செய்ததோடு கூடுதல் பொறுப்பாக திண்டுக்கல் மாவட்டத்தையும் கவனிக்க வேண்டும் என மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில ஆணையரகத்தின் உத்தரவின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு நிரந்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
மதுரையிலிருக்கும் அலுவலரே திண்டுக்கல் மாவட்டத்தையும் கூடுதலாக கவனிப்பார் என உத்தரவிட்ட காரணத்தால் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எப்போது வருகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியாத சூழல் நிலவியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் நிலையில் உடனடியாக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகிய இருவரும் உடனடியாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு தனியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் நியமிக்கவும், மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதை சரிசெய்து கொடுக்க வேண்டியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சாதிக்பாட்ஷா