மடத்துக்குளம் பேரூராட்சி தலைவரின் அதிகாரத்தில், அடாவடி வசூல் செய்யும் கணவர் ! கொந்தளிக்கும் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் ஆளும் கட்சியை சேர்ந்த கலைவாணி பாலமுரளி. இவருடைய கணவர் பாலமுரளி பேரூராட்சி அலுவலகத்தில் தனது மனைவி கலைவாணியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. பாலமுரளி என்பவருக்கு வலது கரமாக செயல்படுபவர் மேஸ்திரி மாரிமுத்து.
பேரூராட்சியில் 28 நபர்கள் துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 47 நபர்கள் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதில், ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசு நேரடியாக சம்பளம் வழங்காமல் சில மகளிர் குழுக்கள் மூலமாக சம்பளம் வழங்கிவருகிறது. அதில், அமராவதி குழுவில் 14 பேர், அப்துல்கலாம் குழுவில் 10 பேர், தீபம் முத்துமாரியம்மன் குழுவில் 11 பேர், செவ்வந்தி பூ மகளிர் குழுவில் 12 பேர் என 47 பேருக்கும் மேற்கண்ட மகளிர் குழுக்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு 582/- ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுவருகிறது.
சம்பளம் வழங்கும் நாளன்று மேஸ்திரி மாரிமுத்து என்பவர் மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பைகள் கொட்டும் கிடங்கிற்கு பணியாளர்களை வரவழைத்து ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் பணியாளர்கள் அந்த மாதத்தில் விடுமுறை எடுத்த நாட்களை கணக்கிட்டு, அந்த நாட்களுக்கான சம்பள பணத்தை பணியாளர்களிடமிருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் துப்புரவு பணியாளர்களிடம் வசூலித்த பணத்தை, பேரூராட்சி தலைவரின் கணவர் பாலமுரளி வசம் ஒப்படைக்கப்பட்டு, அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாரிமுத்துவுக்கு கமிஷனாக வழங்குவதாக தெரியவருகிறது. இது ஒருபுறம் இருக்க, மடத்துக்குளம் பேரூராட்சியின் தலைவர் கலைவாணியின் கணவர் பாலமுரளி வீட்டுமனை அனுமதி , கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி , திருமண மண்டபம் உள்ளிட்ட பல வகைகளில் அடாவடி வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இருசக்கர வாகனம் விற்பனை நிறுவன உரிமையாளர், அதிமுக பிரமுகர் வீட்டு மனை அனுமதிக்கு, பேரூராட்சி தலைவரின் கணவரை அனுகியபோது அனுமதி வழங்க வேண்டுமானால், ஐந்து சென்ட் இடமும், பத்து லட்சம் பணமும் தரவேண்டும் என்றிருக்கிறார். மேலும் குமரலிங்கம் சாலையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு சன் மோட்டார்ஸ் உரிமையாளரிடம் 5 லட்சம், விக்னேஸ்வரா திருமண மண்டபத்தின் உரிமையாளரிடம் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்தி, குழாய் அமைப்பதற்கு, ஐந்து லட்சம் லட்சமாக கொடுத்தால் உடனடியாக பணிகள் செய்து கொடுக்கப்படும் என்பதாக கூறியுள்ளார். பணம் தர மறுத்த மண்டப உரிமையாளர் அவராகவே செலவு செய்து சொந்தமாக சாக்கடை கழிவுநீர் குழாய் அமைத்த விவகாரம் அப்பகுதியில் அனைவரும் அறிந்ததே.!
இதேபோல் பேரூராட்சிக்கு எதிரில் தாராபுரத்தை சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் மூன்று அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டுள்ளார். அவரிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் பாலமுரளி பிரச்சனை செய்ததாகவும், அந்த தொகையை சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர் தர மறுத்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் ஓராண்டுக்கும் மேலாக கட்டிட வேலையை செய்ய விடாமல் பாலமுரளி தடுத்தும் வந்துள்ளார்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட நகைக்கடைக்காரர், பல்வேறுகட்ட முயற்சிகளுக்குப்பிறகு அனுமதி பெற்று, தற்போது கட்டிட வேலையை செய்து வருகின்றார். மடத்துக்குளம் நான்கு முனை சந்திப்பு அருகே புதிய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமானால் 4 லட்சம் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் பாலமுரளி பிரச்சனை செய்துள்ளார்.
பதவியேற்ற நாள் முதல் பேரூராட்சியின் அதிகாரம் அனைத்தையும், தலைவர் கலைவாணியின் கணவரான பாலமுரளி கையிலெடுத்து அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் சொந்த கட்சியினர் மட்டுமல்லாது பலதரப்பட்ட நபர்கள் இவர் மீது அதிருப்தியில் உள்ளனர். அலுவல் நடைமுறைகளுக்கு கூட சாதாரண மக்களிடம் லஞ்சம் எதிர்பார்த்து வேலை செய்து தருவதாகவும் இவர்மீது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பெண் தலைவர் அதிகாரத்தில் கணவர் தலையீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சாதிக் பாட்சா